
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக திவாரே அணை உடைந்தது குறித்து அம்மாநில அமைச்சர் தனஜி சவந்த் அளித்த விளக்கம் பொதுமக்கள் நடுநடுங்க வைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த வாரம் துவக்கம் முதல் 4 நாட்கள் கன மழை பெய்தது. இதன் காரணமாக மழை நீரால் நிரம்பியிருந்த திவாரே அணை உடைந்து, 18 பேர் பலியாகினர். இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் நீர் வள மேலாண்மைத் துறை அமைச்சர் தனஜி சவந்த், அணை உடைந்த சம்பவம் இயற்கைப் பேரழிவு. எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும் என்று பதிலளித்துள்ளார்.
அணை உடைந்தது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகளும், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களும், அணையின் தடுப்புகளை, அப்பகுதியில் இருந்த நண்டுகள்தான் பலவீனப்படுத்தி விட்டதாக என்னிடம் கூறினர்.
மதில்சுவர்களை அதிக அளவில் நண்டுகள் பலவீனப்படுத்தியதே இதற்குக் காரணம், அது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அது மட்டுமல்ல, அணை உடைந்ததற்கு, கன மழையும் ஒரு காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 8 மணி நேரத்தில் 192 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்த 8 மணி நேரத்தில் அணையின் கொள்ளளவு 8 மீட்டர் உயர்ந்ததாகவும், இது மழையா அல்லது வானம் பொத்துக் கொண்டு விழுந்ததா என்று உள்ளூர் மக்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
கொங்கன் பகுதியில், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை 20 லட்சம் கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்டது. இடைவிடாத மழை காரணமாக மொத்த கொள்ளளவும் நிரம்பிய நிலையில், அபாய அளவை தாண்டிய அணை, செவ்வாய்க்கிழமை இரவு உடைந்தது.
அதன் காரணமாக அணையையொட்டி அமைந்துள்ள 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதன் காரணமாக 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.