
அயோத்தியில் ராமருக்கு 251 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதுதொடர்பாக அம்மாநில தலைநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அரசின் உயர்மட்டக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கூறியதாவது:
அயோத்தியில் சரயு நதிக்கரையின் அருகில் 100 ஹெக்டேர் நிலப்பரப்பில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்படும். குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலையை விட இதுவே உலகின் உயரமான சிலையாக அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதனுடன் அயோத்தியின் கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன.
மேலும் இங்கு நூலகம், வாகன நிறுத்துமிடம், வணிகக் கூடங்கள் உடன் கூடிய ராமர் தொடர்பான டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கவும் முடிவெடுத்துள்ளோம். இதற்கான தொழில்நுட்ப உதவிகளுக்கு குஜராத் அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.
சிலை அமைக்கும் இடம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஐஐடி கான்பூர் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த தேசிய பசுமை பொறியியல் ஆய்வக அமைப்பின் உதவிகளை நாடியுள்ளோம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.