எடியூரப்பாவின் முதல்வர் கனவுக்குக் குறுக்கே நிற்பது பாஜகவின் முக்கியக் கொள்கைதானோ?

கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையும் வரை  பாஜக எம்எல்ஏக்கள் அமளி செய்வது, சட்டப்பேரவைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் என படு தீவிரமாக இருந்தனர்.
எடியூரப்பாவின் முதல்வர் கனவுக்குக் குறுக்கே நிற்பது பாஜகவின் முக்கியக் கொள்கைதானோ?

புது தில்லி: கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையும் வரை  பாஜக எம்எல்ஏக்கள் அமளி செய்வது, சட்டப்பேரவைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் என படு தீவிரமாக இருந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு கர்நாடக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி.

அதை வெற்றி முழக்கத்தோடு கொண்டாடிய பாஜகவினர், அதன் பிறகு கடுகு விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாகிவிட்டனர். புது தில்லியில் இருந்து வரும் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன் என்று எடியூரப்பா நேற்று மெல்லியக் குரலில் சொல்லியதோடு சரி. அதன் பிறகு கர்நாடகாவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் அளவுக்கு அமைதி நிலவுகிறது.

பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுவதற்கான திட்டமோ, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கோ இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த போது, புது தில்லியில் அமித் ஷாவுடன், செயல் தலைவர் ஜே.பி. நட்டா, கட்சியின் அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் கூடி கர்நாடக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்த பிறகு, கட்சி மேலிடம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த முறை கட்சி மேலிடம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம், பாஜகவின் மிக முக்கியக் கொள்கைதான் என்கிறார்கள் கட்சிக்கு நெருக்கமானவர்கள். அதாவது, 75 வயதுக்கு மேல் பாஜகவினருக்கு ஆட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படாது என்பதே அது. தற்போது 76 வயதாகும் எடியூரப்பாவுக்கு எவ்வாறு கர்நாடக முதல்வர் பொறுப்பை வழங்குவது என்பது குறித்துத்தான் பாஜக தலைமை தனது பிடியை இறுக்கி வைத்துக் கொண்டுள்ளது.

இதேக் காரணத்தைச் சொல்லித்தான் அன்று ஆனந்திபென் படேலுக்கு குஜராத் முதல்வர் பதவி மறுக்கப்பட்டது.  இதேக் கொள்கை முடிவுதான், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றும் கருதப்படுகிறது. ஆனால், பாஜக தலைமைக்கோ எடியூரப்பாவை தவிர்த்து, வேறு முக்கியத் தலைவரை தேர்வு செய்ய பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. தற்போதைக்கு கர்நாடகாவில் பாஜகவின் மூத்தத் தலைவராக எடியூரப்பா மட்டுமே திகழ்கிறார். ஆனால் புதிய தலைமையைத் தேர்வு செய்ய பாஜக நினைக்கலாம்.

ஒரு வேளை வேறு வழியில்லாமல் எடியூரப்பாவே முதல்வராக்கப்படலாம். ஆனால் இதுதான் அவருக்கான கடைசி முதல்வர் வாய்ப்பாக அது இருக்கும். அடுத்த பேரவைத் தேர்தலுக்குள் புதிய தலைவரை உருவாக்க பாஜக முனையலாம் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com