உங்களுக்கு வங்கிக் கடன் மறுக்கப்படுகிறதா? காரணம் இதுவாக இருக்கலாம்!

தனிநபர் கடன், கல்விக் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்காக ஒருவர் விண்ணப்பிக்கும் போது அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது அதிருப்தியுடன் சற்று அதிர்ச்சியும் அடைவார்கள்.
உங்களுக்கு வங்கிக் கடன் மறுக்கப்படுகிறதா? காரணம் இதுவாக இருக்கலாம்!


தனிநபர் கடன், கல்விக் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்காக ஒருவர் விண்ணப்பிக்கும் போது அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது அதிருப்தியுடன் சற்று அதிர்ச்சியும் அடைவார்கள்.

ஒவ்வொரு முறையும் கடன் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது ஒரே ஒரு விஷயத்தைத்தான் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, கடன் கோரி விண்ணப்பித்தவரின் பொருளாதார வரலாறு எப்படி இருந்தது என்பதுதான். அது என்னங்க? பொருளாதார வரலாறு, பொருளாதாரம் வேறு சப்ஜெக்ட், வரலாறு வேற சப்ஜெக்ட். இரண்டையும் சேர்த்து சொன்னால் விளங்கவில்லையே என்கிறீர்களா?

அதாவது ஒருவரது கடந்தகால கடனை திருப்பி செலுத்தியதற்கான வரலாறு. கடனை திரும்ப செலுத்தாமல் தவறியது, மாதத் தவணையை ஒழுங்காக செலுத்தாமல் விட்டது, கிரெடிட் கார்டு தவணை நிலுவையில் இருப்பது போன்ற சில பல காரணங்கள் நமது கடன் விண்ணப்பத்துக்கு பச்சைக் கொடி காட்ட விடாமல் தடுக்கும் காரணிகளாக இருக்கும்.

அவ்வளவு ஏன், ஏதேனும் தகவல் தொடர்பு நிறுவனத்தின் போஸ்ட் பெய்ட் எண்ணைப் பயன்படுத்திவிட்டு, மாதக் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தாலும் கூட அது சிபில் ஸ்கோரில் எதிரொலிக்கும் அபாயம் உள்ளது.

அதாவது, ஒரு தனி நபரின் கிரெடிட் ஸ்கோரை வங்கிகள் கணக்கில் கொண்டே அவர்களுக்கு கடன் வழங்க முன் வருகின்றன.

நிதி நிறுவனங்களில், வீட்டுக் கடன் , கார் கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் கடன், தனிநபர் கடன், தொழில்கடன் என எந்த வகையான கடன்களை கேட்டு நாம் விண்ணப்பித்தாலும், முதலில் ஆய்வு செய்யப்படுவது நமது கிரெடிட் ஸ்கோர் தான். கிரெடிட் ஸ்கோர் போதுமான அளவுக்கு இல்லையென்றால் நமது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.

நம்நாட்டில் எக்ஸ்பீரியன், சிபில், ஹைமார்க், ஈக்விஃபேக்ஸ் என நான்கு கிரெடிட் தகவல் நிறுவனங்கள் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் கடன் வாங்குபவர்களைப் பற்றியும், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களைப் பற்றியும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை.

இவை, ஒவ்வொருவரின் பொருளாதார வரலாற்றையும் ஆராய்ந்து 300 முதல் 900 வரையிலான மதிப்பெண்ணை வழங்கும். ஒருவருக்கு 700 - 750 வரையிலான மதிப்பெண் இருக்கும்பட்சத்தில் அவருக்கு கடன் வழங்க வங்கிகள் தாமாகவே முன்வரும்.

சில வங்கிகள் சிபில், எக்ஸ்பீரியன் என ஒன்றுக்கும் மேற்பட்ட கிரடிட் தகவல் நிறுவனங்களிடம் இருந்து புள்ளி விவரங்களைப் பெற்று கடன் வழங்குவது குறித்து ஆலோசிக்கும். ஒரு சில வங்கிகள் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் புள்ளி விவரத்தை மட்டும் ஆராயும். ஒவ்வொரு நிறுவனமும், தனி நபருக்கு மதிப்பெண் அளிக்கும் முறையில் வேறுபாடு காணப்படுவது வேறு விஷயம்.

ஒரு வேளை உங்களுக்கே உங்களது கிரடிட் ஸ்கோர் தேவைப்பட்டால், நீங்கள் மேற்கண்ட நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி உங்களது மதிப்பெண்ணை பெற்றுக் கொள்ளலாம்.

இதில், வங்கிகள், நிதி நிறுவனங்களில் நாம் வாங்கும் கடன்கள், அவற்றை திருப்பிச் செலுத்தும் விதம் என அனைத்தும் பராமரிக்கப்பட்டு தனி நபருக்கு நிறுவனம் போட்ட மதிப்பெண்கள் அவருக்குத் தெரியவரும்.

ஒருவருக்கு ஒருவர் கிவ்வன் டேக் பாலிஸி தான் இது!

கிரெடிட் ஸ்கோர் என்றாலே தற்போது பரவலாக பேசப்படுவது சிபில் ஸ்கோர் தான். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவலையும், அவர்கள் அதை திருப்பிச் செலுத்துவது பற்றிய தகவலையும் இந்த அமைப்பிற்கு தெரிவிக்கும். அதை இந்த நிறுவனங்கள் சேகரித்து வைத்து, அதை முறைப்படுத்தி, அதே வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளரின் ஸ்கோரைக் கேட்கும் போது கொடுத்துதவும்.
எனவே, ஒரு வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றியவர், மற்றொரு வங்கியின் கடன் வாங்க ஏமாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பல காலமாக இருந்து வந்த வங்கிகளின் வாராக் கடன் அழுத்தத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம். பிறகெப்படி மல்லையாவுக்கு கோடிக் கணக்கில் கடன் கொடுக்கப்பட்டது என்றெல்லாம் கேட்கக் கூடாது?

ஒரு வேளை உங்களுக்கு 700 முதல் 800 வரை மதிப்பெண் இருந்தால் போதிய ஆவணங்களை பெற்று வங்கி, நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்கும். மதிப்பெண் 600 முதல் 700-ஆக இருந்தால் தீவிர பரிசீலனைக்குப் பின்னரே கடன் வழங்கப்படும். மதிப்பெண் 600-க்கும் கீழ் இருந்தால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்க வாய்ப்பு கிடையாது.

சரி ஒருவர் எந்த கடனும் வாங்கவில்லை, அவரது ஸ்கோர் எப்படி இருக்கும் என்றால், அவரது தகவல்கள் சிபில் ஸ்கோரில் இடம்பெற்றிருக்காது, இருந்தாலும் அது மைனஸ் என்ற அளவிலேயே இருக்கும், ஒருவர் கடனே வாங்கவில்லை என்றால் அது அவருக்கு நேர்மறையாக அமையாது, மாறாக புதியவர் என்பதால் அவருக்குக் கடன் கொடுக்க மாத சம்பளம், வங்கிக் கணக்கில் இருப்பு போன்றவை முக்கியமாகக் கவனத்தில் கொண்டு கடன் வழங்கப்படும்.

அவ்வாறு இதுவரை கடனே வாங்காதவர்களாக இருந்தால், அவர்களுக்கு என்.ஏ. அல்லது என்.ஹெச். என்று சான்றிதழ் வழங்கப்படும். சில வங்கிகள் இதுபோன்ற புதியவர்களாக இருந்தால் கூப்பிட்டுக் கடன் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

ஸ்கோர் குறையக் காரணம் என்ன?

ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்தல்
வங்கிக் காசோலை (செக் ரிட்டர்ன்) திரும்புதல்
மாதத் தவணையை கால தாமதத்துடன் செலுத்துதல்
வங்கியில் கடன் தவணை நிலுவையில் இருப்பது போன்றவை ஸ்கோர் குறையக் காரணமாகிவிடும்.

சிபில் ஸ்கோரை உயர்த்த..

கையில் பணம் இருந்தாலும் ஏதேனும் ஒரு சிறிய மாதத் தவணைக் கடனைப் பெற்று அதனை சரியாக செலுத்துதல்.

அடமானமில்லாத கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்குவதை குறைத்தல். 

அதிக கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதைக் குறைத்தல்

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு கடன் கேட்டு விண்ணப்பிப்பதை தவிர்த்தல் போன்றவற்றால் உங்கள் சிபில் ஸ்கோர் நிச்சயம் உயரலாம்.

வாடிக்கையாளர்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், எந்த வங்கியும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்காது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, வங்கியில் கடன் கோரி விண்ணப்பிக்கும் போது ஒருவர் தனது ஸ்கோரை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com