உன்னாவ் பெண் வந்த வாகனம் விபத்து: சதியா என சந்தேகத்தை எழுப்பும் ஒரே விஷயம்!

பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் அளித்த உன்னாவ் பெண் வந்த கார் மீது வேகமாக வந்த டிரக் மோதியதில், அவருடன் வந்த உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். அப்பெண்ணும், வழக்குரைஞரும் படுகாயம் அடைந்தனர்.
உன்னாவ் பெண் வந்த வாகனம் விபத்து: சதியா என சந்தேகத்தை எழுப்பும் ஒரே விஷயம்!
Published on
Updated on
2 min read

பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் அளித்த உன்னாவ் பெண் வந்த கார் மீது வேகமாக வந்த டிரக் மோதியதில், அவருடன் வந்த உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். அப்பெண்ணும், வழக்குரைஞரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர் மாதவ் பிரசாத் வெர்மா கூறுகையில், உன்னாவ் பெண்ணும், அவரது இரண்டு பெண் உறவினர்களும், ரே பரேலி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரது உறவினரை சந்திக்க  வழக்குரைஞருடன் காரில் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டது.

விபத்தில் இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்கள் லக்னௌவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இது குறித்து லக்னௌ ஏடிஜி ராஜீவ் குமார் கூறுகையில், உன்னாவ் பெண் குடும்பத்துக்கு ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு வீரர்கள், விபத்து நடந்த போது உடன் வரவில்லை. அவர்கள் உடன் வராதது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தை ஏற்படுத்திய டிரக் ஃபதேஹ்புர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள், விபத்து நேர்ந்த  போது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த டிரக், கார் மீது மோதியது. விபத்து நிகழ்ந்ததுமே சம்பவ இடத்தில் இருந்து டிரக் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். 

வழக்கின் பின்னணி
இந்த வழக்கில் 4 முறை எம்எல்ஏவாக இருந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது 2017ம் ஆண்டு அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக விபத்தில் சிக்கிய பெண் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. 

கடந்த 2017ம் ஆண்டு பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கும், அவரது சகோதரர்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 18 வயதுப் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரை காவல் துறையினர் வாங்க மறுத்ததை அடுத்து, லக்னெளவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன்பு, அப்பெண் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தீக்குளிக்க முயன்றார்.

அதற்கு முன்னதாக, அப்பெண்ணின் தந்தை, நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியதாகவும், எம்எல்ஏவின் சகோதரரைத் தாக்கியதாகவும் காவல் துறையினர் கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இரு தினங்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவருடைய உடலில் அடித்து துன்புறுத்திய காயங்கள் இருந்ததாக, அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எம்எல்ஏ மீது எழுந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தை அடுத்து இந்த பலாத்கார வழக்கு மாநில போலீஸாரிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. 
குல்தீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது பொய் வழக்கு போடுவதற்கு சதித் திட்டம் தீட்டியதாக, எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மாகி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் துறை துணை ஆய்வாளர்கள் அசோக் சிங் பதூரியா, காம்தா பிரசாத், காவலர் அமீர் கான், எம்எல்ஏ-வின் சகோதரர் அதுல் சிங் செங்கர் உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்கு உள்ளது.
 
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமாவும், சிபிஐ தரப்பில் முக்கிய சாட்சியுமான யூசுப், திடீரென மரணம் அடைந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்டது.

எம்எல்ஏ மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டபோது, அப்பெண்ணின் தந்தையை மட்டுமல்லாது மாமாவான யூசுப்பையும் போலீஸார் அழைத்துச் சென்று அடித்து உதைத்தனர். அப்போது, அவருக்கு கடுமையான உள்காயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் இறந்துவிட்டார். சிபிஐ மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உறவினர்கள் உடலைப் புதைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com