
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வி.ஜி. சித்தார்த்தா எழுதியதாக வெளியான கடிதத்தில் இருக்கும் கையெழுத்து அவருடைய கையெழுத்தோடு ஒத்துப்போகவில்லை என்று வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளது.
கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா நேற்று மாயமான நிலையில், இன்று அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதியதாகக் கூறி ஒரு கடிதமும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
ஆனால் அந்த கடிதத்தில் இருக்கும் கையெழுத்து, அவரது வருடாந்திர கணக்கு தாக்கலில் இருக்கும் கையெழுத்தோடு ஒத்துப் போகவில்லை என்றும், அந்த கடிதம் எந்த அளவுக்கு உண்மைத் தன்மை கொண்டது என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரித்துறை அளித்திருக்கும் விளக்கத்தில், "கஃபே காஃபி டே' நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா, கருப்புப் பணம் வைத்திருந்ததை விசாரணையின்போதும் ஒப்புக்கொண்டார்; விசாரணையின்போது, அவரைத் துன்புறுத்தவில்லை என வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வி.ஜி. சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், வருமான வரித் துறையினர் இத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து மங்களூருக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தபோது, வி.ஜி. சித்தார்த்தா மாயமானார். தீவிர தேடுதலின் பலனாக அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதனிடையே, அவர் எழுதியதாகக் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "எனது நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தபோதும், வருமான வரித் துறையினர் என்னைத் துன்புறுத்தி, எனது சொத்துகளை முடக்கினர். இதனால், எனது நிறுவனம் கடனில் சிக்கியது. வருமான வரித் துறையினரின் நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றதாகும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
சித்தார்த்தாவின் கடிதம் தொடர்பாக, வருமான வரித் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடிதத்தில் சித்தார்த்தா குறிப்பிட்டுள்ளது தவறான தகவல்கள் ஆகும். வரி ஏய்ப்பில் ஈடுபட்ட அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கணக்கில் வராத பணத்தை வைத்துள்ளதாக அவரே ஒப்புக்கொண்டார். அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 2017-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே சித்தார்த்தா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
"மைண்ட் ட்ரீ' நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.3,200 கோடியை சித்தார்த்தா பெற்றார். இதற்கு ரூ.300 கோடி வரி செலுத்த வேண்டும். ஆனால், அவர் ரூ.46 கோடி மட்டுமே வரியாகச் செலுத்தியிருந்தார். இதையடுத்தே, அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரிச் சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகள் நடந்துகொண்டனர். விசாரணையின்போது, அவருக்குத் துன்புறுத்தல் எதுவும் அளிக்கப்படவில்லை.
அவர் எழுதிய கடிதம் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்தும் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. கடிதத்தில் உள்ள கையெழுத்தும், சித்தார்த்தாவிடம் விசாரணை மேற்கொண்டபோது பெற்ற கையெழுத்தும் வித்தியாசமாக உள்ளன என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.