தமிழகம் ஹிந்தி படிக்க வேண்டும் என்று பாஜக சொல்ல முடியாது: மம்தா ஆதரவுக் குரல்
கொல்கத்தா : தமிழகத்தில் மக்கள் இந்தி படிக்க வேண்டும் என்று பாஜக சொல்ல முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையின் வரைவில் ஹிந்தி மொழியை ஹிந்தி பேசாத மக்கள்மீது திணிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக புதிய கல்வி கொள்கை வரைவில் திருத்தம் செய்த மத்திய அரசு, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்ற பரிந்துரையை கைவிடுவதாக அறிவித்தது.
தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று தெளிவாக அறிவித்தது. மத்திய அரசின் முயற்சிக்கு தமிழகம் போலவே மேற்கு வங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் இந்தி படிக்க வேண்டும் என்று பாஜக சொல்ல முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக பாரம்பரியம் மற்றும் மொழி உள்ளது. இது நம்முடைய இந்தியா. மாநிலங்களின் விதியை பா.ஜனதா நிர்ணயம் செய்ய முடியாது. தமிழகத்தில் மக்கள் இந்தி படிக்க வேண்டும் என்று பா.ஜனதா சொல்ல முடியாது. அதை பா.ஜனதா கட்டாயப்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.