அபிநந்தன் உடலில் உளவு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை: எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உறுதியானது

பாகிஸ்தானின் பிடியில் சுமார் இரண்டரை நாள்கள் இருந்த அபிநந்தன், இந்தியாவிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டார். அட்டாரி-வாகா எல்லையில் அவரை இந்திய விமானப் படை
அபிநந்தன் உடலில் உளவு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை: எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உறுதியானது


ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளவர்கள் அடித்ததால் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் உடலில் பல இடங்களில் சிறியளவிலான காயங்கள் மட்டுமே உள்ளது என்றும், அவரது உடலில் உளவு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்று அபிநந்தனுக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் அறிக்கையில் உறுதியாகி உள்ளது. 

கடந்த மாதம் 26-ஆம் தேதி பாகிஸ்தானின் பாலாகோட், முசாஃபராபாத், சகோட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை, அவற்றை குண்டுவீசித் தகர்த்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த 27-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவின. 

இதைக் கண்டறிந்த இந்திய விமானப் படை, பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது. அப்போது பாகிஸ்தானின் "எஃப்-16' ரக போர் விமானம் ஒன்றை இந்திய விமானப் படை சுட்டு வீழ்த்தியது.

அதேவேளையில், அந்நாட்டின் எஞ்சிய போர் விமானங்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப் படையின் மிக்-21 ரக போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தை இயக்கிய இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். 

பாகிஸ்தானின் பிடியில் சுமார் இரண்டரை நாள்கள் இருந்த அபிநந்தன், இந்தியாவிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டார். அட்டாரி-வாகா எல்லையில் அவரை இந்திய விமானப் படை அதிகாரிகள் வரவேற்று அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, அவர் தலைநகர் தில்லிக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் அழைத்து வரப்பட்டார். தில்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இந்திய விமானப் படை உயரதிகாரிகள் சனிக்கிழமை காலையில் சந்தித்தனர்.

அதன் பின்னர், விமானப் படை மத்திய மருத்துவமனைக்கு அபிநந்தன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் இந்தியா வந்த போது, அவரது வலது கண்ணின் மேல் பகுதியில் வீக்கம் இருந்தது. அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்,  "கூலிங் டவுன்' என்ற  சிகிச்சை முறையும் மேற்கொள்ளப்படுகிறது. 

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்தபோது, தன்னை உடல்ரீதியாக யாரும் துன்புறுத்தவில்லை என்றும், மனரீதியாக பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் இந்திய விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து விமானி அபிநந்தன் வர்த்தமான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதைத்தொடர்ந்து, தில்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அபிநந்தனை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார்.

விமானப் படை விதிகளின் படி, அபிநந்தன் தனது அறிக்கையையும் சமர்ப்பிக்க உள்ளார். இதற்கான நடைமுறைகள் முடிந்த பிறகே அவர் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.

இதனிடையே, அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் அதிகாரிகள் உளவறியும் கருவிகளை பொருத்தி அனுப்பியிருக்கலாம் என்ற யூகச்செய்திகளும் சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் பதில் கிடைத்துள்ளது. 

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முடிவுகளின்படி அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதும் பொருத்தப்படவில்லை. ஆனால், அவரது முதுகுத்தண்டு எலும்பின் கீழ் பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன. 

பாகிஸ்தான் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட அபிநந்தனின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அவர் பாரசூட் மூலம் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் கீழ்தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. விமானத்தில் இருந்து விழுந்த போது இந்த முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளவர்கள் அடித்ததால் அபிநந்தன் உடலில் சிறு, சிறு காயங்கள் உள்ளன. 

அபிநந்தனின் உடலில் உளவு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்பதும் அபிநந்தனுக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com