

உலக பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 13ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ், 2019ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த 106 கோடீஸ்வரர்கள் இடம்பிடித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டில் இப்பட்டியலில் முகேஷ் அம்பானி 19ஆவது இடத்தில் இருந்தார். அப்போது அவருக்கு 40.1 பில்லியன் டாலர் மதிப்பில் சொத்துக்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 6 இடங்கள் முன்னேறி, 13ஆவது இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். தற்போது 50 பில்லியன் டாலர் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 36ஆவது இடத்திலும், ஹெச்.சி.எல் இணை நிறுவனர் சிவ் நாடார் 82ஆவது இடத்திலும், ஆர்ச்சிலர் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் 91ஆவது இடத்திலும் இருக்கின்றனர். ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் பிர்லா (122), அதானி குழும தலைவர் கௌதம் அதானி (167), பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் (244), பதஞ்சலி இணை நிறுவனர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா (365), பிரமல் அதிபர் அஜய் பிரமல் (436), இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி (962), ஆர்காம் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி (1349) ஆகியோரும் போர்ப்ஸ் பட்டியலில் உள்ளனர்.
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பேஜோஸ் முதலிடத்திலும், பிரபல தொழிலதிபர்கள் பில்கேட்ஸ், வாரன் பபெட் ஆகியோர் முறையே 2, 3ஆவது இடங்களிலும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.