கர்நாடக கட்டட விபத்து: மதிய உணவுக்கு சற்று தாமதமானதால் உயிரை இழந்த தந்தை-மகன்

கர்நாடக மாநிலம், தார்வாட்டில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக கட்டட விபத்து: மதிய உணவுக்கு சற்று தாமதமானதால் உயிரை இழந்த தந்தை-மகன்
Updated on
1 min read


தர்வாத்: கர்நாடக மாநிலம், தார்வாட்டில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், குமரேஸ்வர நகரில் 5 மாடிக் கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென கட்டடம் சரிந்து விழுந்தது. 

இதில் மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.  இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 

இடிந்துவிழுந்த இந்த கட்டடத்தில் ஒரு கடையை வாங்கி ஜனவரி மாதம் முதல் பெயிண்ட் கடை நடத்தி வந்த மல்லேஸ்வரய்யாவின் குடும்பத்தினர், விரைவில் தங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று காத்திருந்த நிலையில், அவர்களது தலையில் இடி விழுந்ததைப் போல இந்த கட்டடம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் மல்லேஸ்வரய்யாவும் (62) அவரது மகன் ஆசித்தும் (27) உயிரிழந்தனர். 

புதன்கிழமை மதியம், தங்கள் குடும்பத்தின் மூத்த நபரான மல்லேஸ்வரய்யா மற்றும் அவரது மகன் ஆசித்தின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட போது குடும்பமே நொறுங்கிப் போனது.

செவ்வாய் இரவு முழுவதும், செல்லும் ஆம்புலன்ஸ்களில் எல்லாம் தன் கணவர் ஆசித் இருக்கிறாரா என்று பார்த்துக் கொண்டே கலங்கி நின்றிருந்த 6 மாத கர்ப்பிணியான ஜோதி, ஆசித்தின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அறிந்து சொல்லொணாத் துயரம் அடைந்தார்.

ஒரே விபத்தில் இரண்டு நபர்களைப் பறிகொடுத்த குடும்பத்தினர் கூறுகையில், வழக்கமாக இருவருமே மதியம் 2.30 மணிக்கு உணவுக்காக வீட்டுக்கு வந்து விடுவார்கள். ஆனால் அன்றைய தினம் சற்று வேலை இருந்ததால் அவர்கள் 3.30 மணி வரை கடையிலேயே இருந்தனர். அப்போதுதான் அந்த துயர சம்பவம் நடந்து இருவருமே மரணித்துவிட்டனர். வழக்கம் போல மதிய வேளை உணவுக்கு வந்திருந்தால் மரணம் நிகழ்ந்திருக்காதே என்று சொல்லி கலங்குகிறார்கள்.

ஜோதியின் சகோதரர் கூறுகையில், இடிந்து விழுந்த கட்டடத்தில் ரூ.20 லட்சம் கொடுத்து ஒரு கடையை வாங்கி ஹார்ட்வேர் கடை திறந்தோம். தற்போது எதுவும் இல்லை. எனது சகோதரி கர்ப்பிணியாக உள்ளார், குடும்பத்துக்காக சம்பாதித்த இருவருமே இப்போது இல்லை என்கிறார் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com