

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையில், அந்நாட்டு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு ஒன்று பிரிட்டனுக்கு சென்றுள்ளது.
லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நீரவ் மோடி, அந்நாட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையில் இணை இயக்குநர்கள் நிலையில் உள்ள அதிகாரிகள் குழு லண்டனுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளது.
நீரவ் மோடி, அவரது மனைவி அமி மோடி ஆகியோர் மீது கடைசியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, நீரவ் மோடியின் கடன் மோசடிக்கு எதிராக கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சொத்து முடக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் லண்டனுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரும் நடவடிக்கையில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு இந்த ஆவணங்கள் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரியவந்தது. இந்த மோசடி வெளியாவதற்கு முன்பே அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதனிடையே, அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. அதையடுத்து, அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுடன், நீரவ் மோடி சார்பில் ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து ஆஜராகாததால், நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, நீரவ் மோடிக்கு ஜாமீன் கோரி அவரது தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. அப்போது, நீரவ் மோடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.