கடலோர மாநிலங்களில் கரை சேருமா தேசிய கட்சிகள்?

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கடலோர மாநிலங்களில் குறிப்பாக, கிழக்கு கடலோர மாநிலங்களில் தேசிய கட்சிகள் கரைசேருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Lok Sabha Election Special 2019
Lok Sabha Election Special 2019


நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கடலோர மாநிலங்களில் குறிப்பாக, கிழக்கு கடலோர மாநிலங்களில் தேசிய கட்சிகள் கரைசேருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த கால தேர்தல் அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, இப்பிராந்தியத்தில் கூட்டணியைக் கட்டமைக்க பாஜகவும், காங்கிரஸும் மேற்கொண்ட முயற்சிகளில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

ஒடிஸா, மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழ்நாடு உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநிலங்களில் பிராந்திய கட்சிகளே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும், இந்த மாநிலங்களில் பாஜக 28 சதவீத இடங்களிலேயே வெற்றி பெற்றது.
அத்தேர்தலில் நாடு முழுவதும் பிராந்திய கட்சிகள் 40 சதவீத இடங்களில் வெற்றி பெற்றன. அதேநேரத்தில், கடலோர மாநிலங்களில் பிராந்திய கட்சிகளின் வெற்றி சதவீதம் 63. தேசிய கட்சிகள் வெறும் 37 சதவீத இடங்களிலேயே வெல்ல முடிந்தது.

இது ஏதோ 2014 தேர்தலில் மட்டும்தான் என்றில்லை. அதற்கு முன்னரும் இதேநிலைதான். 1998, 1999 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோதும், கிழக்கு கடலோர மாநிலங்களில் குறைந்த இடங்களையே வென்றது. மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ்,  பாஜகவுடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்கு குறிப்பிடும்படியான வெற்றியைப் பெற்றிருந்தது. 2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது இப்பகுதிகளில் அக்கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஒடிஸா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது.
இந்த முறை வடமாநிலங்களில் எதிர்க்கட்சிக் கூட்டணிகள் கடும் சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பான்மை பலத்தைப் பெற கடலோர மாநிலங்களைக் குறிவைத்துள்ளது பாஜக. எதிர்பார்ப்பையும் மீறி கிழக்கு கடலோர மாநிலங்களில் பாஜக அதிக வெற்றிகளைப் பெறும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2014இல் என்ன நிலைமை, 2019இல் தேசிய கட்சிகளின் வியூகம் என்ன, அது வெற்றிக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.

ஆந்திரம்
2014, மக்களவைத் தேர்தல் தெலங்கானாவை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாநிலத்துக்கு நடைபெற்றது. அதேவேளையில் சட்டப்பேரவை தேர்தல் ஆந்திரம், தெலங்கானாவுக்கு தனித்தனியாக நடைபெற்றது. 
மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தும், சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தும் போட்டியிட்டன. தெலுங்குதேசம் 16 இடங்களிலும், டிஆர்எஸ் 11 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 9 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வென்றன.

ஆந்திர பகுதியில் உள்ள தொகுதிகளுக்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் 103 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தெலங்கானா பகுதியில் உள்ள பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி 63 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆந்திரத்தில் இப்போதைய மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி தனித்துக் களம்காண்கிறது. பாஜக, காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.

கடந்த முறை தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து 3 இடங்களிலேயே வென்ற நிலையில், இப்போது தனித்துப் போட்டியிடும் பாஜக முழுக்க மோடியின் செல்வாக்கை மட்டுமே நம்பியிருக்கிறது.

மேற்கு கடலோரத்தில் தேசிய கட்சிகளின் வலிமை
கிழக்கு கடலோர மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், மேற்கு கடலோர மாநிலங்களில் தேசிய கட்சிகள் வலிமையாக உள்ளன. 
அதன்படி, குஜராத், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரத்தில் பாஜக செல்வாக்குடன் திகழ்கிறது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், குஜராத்தில் மொத்தமுள்ள 26 இடங்களிலும் பாஜக வென்றது. கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் வென்றன.
கோவாவில் மொத்தமுள்ள 2 இடங்களிலும் பாஜக வென்றது. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக 23 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை 18 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.


மேற்கு வங்கம்
2014, மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. நான்குமுனைப் போட்டியில் மொத்தமுள்ள 42 இடங்களில் 34 இடங்களில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 4 இடங்களிலும், பாஜக, மார்க்சிஸ்ட் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போது திரிணமூல் காங்கிரஸ் 36 எம்.பி.க்களுடன் மக்களவையில் 4ஆவது பெரிய கட்சியாக உள்ளது.

2016 பேரவைத் தேர்தலிலும் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணமூல் 211 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸும், மார்க்சிஸ்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் 44 இடங்களையும், மார்க்சிஸ்ட் 26 இடங்களையும் வென்றன. தனித்துப் போட்டியிட்ட பாஜக 3 இடங்களில் மட்டுமே வென்றது.

அதன்பிறகு மாநிலத்தில் பாஜகவின் எழுச்சி காரணமாக, இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் திரிணமூல் கூட்டணி அமைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஊகங்களைப் பொய்யாக்கி தனித்தே போட்டியிடுகிறது திரிணமூல்.

இருப்பினும், ராகுலின் புதிய தலைமை, பிரியங்காவின் வருகை என காங்கிரஸ் கூடுதல் உத்வேகம் பெற்று தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவருகிறது. மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் பாஜகவும் நான்குமுனைப் போட்டியை சாதகமாக்க முடியுமா என முயன்று வருகிறது.

ஒடிஸா
2014, மக்களவைத் தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டன. மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது பிஜு ஜனதா தளம். மக்களவையுடன் மாநில சட்டப்பேரவைக்கும் சேர்த்தே தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 117 இடங்களை வென்று மிரளவைத்தது பிஜு ஜனதா தளம். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் வென்றன. இந்த முறையும் மக்களவைத் தேர்தலுடன் பேரவைக்கும் நடைபெறும் தேர்தலில் மும்முனைப் போட்டிதான். கருத்துக் கணிப்புகள் பிஜு ஜனதா தளத்துக்கு ஆதரவாகவே இருக்க, தேசிய கட்சிகள் கரைசேர்வது எப்படி என வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு
2014, மக்களவைத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தும், திமுக கூட்டணியில் ஓர் அணியும், இரு கம்யூனிஸ்டுகள் இணைந்து ஓர் அணியும், பாரதிய ஜனதா, தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஓர் அணியும் களம்கண்டன. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அதிமுக வென்றது. பாஜக, பாமக தலா ஒரு தொகுதியில் வென்றன. மற்ற கட்சிகளுக்கு ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை.
இந்த முறை ஆளும் அதிமுகவுடன் பலமான கூட்டணியை அமைத்துள்ளது பாஜக. காங்கிரஸும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது. அதிமுகவும், திமுகவும் சரிக்கு சமமாக 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியில் பாஜக 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
வடமாநிலங்களில் பிராந்திய கட்சிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தமிழகத்தில் சில தொகுதிகளாவது ஜெயித்து ஈடுகட்ட இரு தேசிய கட்சிகளுமே விரும்புகின்றன. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் தனது வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகக் கூறும் பாஜக, அதிமுக எனும் வலிமையான கூட்டணி கிடைத்ததால் உற்சாகத்தில் இருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சிகளுக்கு எதிரான  மக்களின் மனோபாவம் தங்களுக்கு லாபத்தைத் தரும் என எதிர்பார்க்கிறது காங்கிரஸ்.

உறுதியா பிடிவாதமா?


பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு தலைமை வகிப்பதில் காங்கிரஸுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே ஒரு போட்டியே நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த விஷயத்தில் காங்கிரஸுக்கு தடைபோடுவதே மம்தா பானர்ஜிதான். அதனால்தானோ என்னவோ, பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் மம்தா நடத்திய பேரணியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒரு டஜன் தலைவர்கள் கலந்துகொண்டபோதும் காங்கிரஸ் தலைவர் ராகுலோ, சோனியா காந்தியோ அதில் பங்கேற்காமல் தமது கட்சி சார்பில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அனுப்பிவைத்தார்கள். காங்கிரஸின் தலைமையை ஏற்பதில்லை என்பதில் மம்தா உறுதியாக இருப்பது காங்கிரஸுக்கு பிடிவாதமாகத் தெரிகிறது. மம்தாவும், மோடியும் ஒன்றுதான் என முதல்முறையாக ராகுல் காந்தி மம்தாவை விமர்சித்திருப்பதும் அந்தக் கோபத்தில்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அன்று தோழன்; இன்று எதிரி

2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியின் உற்ற தோழனாகத் திகழ்ந்தார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. ஆனால், ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதும், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக நிறைவேற்றாத கோபத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறினார்.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவேன் என்பது 2014ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது சந்திரபாபு அளித்த முக்கியமான வாக்குறுதி. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாதது அவருக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது. அதன் எதிரொலிதான் பாஜகவின் தீவிர எதிர்ப்பாளராக அவரை மாற்றியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com