2 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது: மிஷன் சக்தி ஏவுகணை குறித்து டிஆர்டிஓ தலைவர் பேட்டி

மிஷன் சக்தி திட்டமானது, ஒடிஸா மாநிலம், அப்துல் கலாம் தீவிலிருந்து புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையாகும். 
2 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது: மிஷன் சக்தி ஏவுகணை குறித்து டிஆர்டிஓ தலைவர் பேட்டி

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை  (மிஷன் சக்தி திட்டம்) வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம், இந்த வல்லமையைக் கொண்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

மிஷன் சக்தி திட்டமானது, ஒடிஸா மாநிலம், அப்துல் கலாம் தீவிலிருந்து புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையாகும். அதன்படி, புவியிலிருந்து 300 கிமீ தொலைவிலுள்ள செயற்கைக்கோள் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். 

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகத்தின் (டிஆர்டிஓ) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி கூறியதாவது:

பாலஸ்டிக் வகை தொழில்நுட்பத்துடன் இந்த ஏவுகணை வடிமகைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணையை தயாரிக்க பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன் தேசிய பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணை தயாரிப்பில் 100 விஞ்ஞானிகள் இரவு-பகலாக உழைத்துள்ளனர். 

இந்த ஏவுகணை பிருத்வி வகை ஏவுகணைக்கு முற்றிலும் முரணானது. சோதனை முயற்சியின்போது 300 கி.மீ. தொலைவில் இலக்கு இருந்ததால், அதனை தாக்கி அழித்தது. ஆனாலும், இந்த ஏவுகணை 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. மேலும் நம் நாடு பொறுப்புணர்வு கொண்டதாக இருப்பதால், சோதனை தாக்குதலால் ஏற்படும் கழிவுகள் விரைவில் மறையும் விதமாக இலக்கு 300 கிலோ மீட்டருக்குள் நிர்ணயிக்கப்பட்டது.

கைநடிக் வகை தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்தியாவின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும் என்ற ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com