மக்களவைத் தேர்தல்: 51 தொகுதிகளில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 

மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு 51 தொகுதிகளில் இன்று திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று
மக்களவைத் தேர்தல்: 51 தொகுதிகளில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 
Published on
Updated on
2 min read


மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு 51 தொகுதிகளில் இன்று திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். 

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி 7 மாநிலங்களிலும் 96,088 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இன்று திங்கள்கிழமை 5-ஆவது கட்டமாக உத்தரப் பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்கம் (7), மத்தியப் பிரதேசம் (7), பிகார் (5), ஜார்க்கண்ட் (4), ஜம்மு-காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெற்று வரும் 5-ஆம் கட்டத் தேர்தலில் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.75 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 4.63 கோடி பேர் ஆண்கள்; 4.12 கோடி பேர் பெண்கள் ஆவர். 

மேற்கு வங்கத்தில் முந்தைய வாக்குப்பதிவின்போது மோதல் சம்பவங்கள் பரவலாக நடைபெற்றன. இதைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள 7 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

களத்தில் உள்ள தலைவர்கள்: உத்தரப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் சோனியா காந்தியின் ரேபரேலி, ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதிகளும் அடங்கும். 

5 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல்: ஆந்திர சட்டப் பேரவைக்கும், அந்த மாநிலத்திலுள்ள மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் 5 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், 3 சட்டப் பேரவைத் தொகுதிகள், 5 மக்களவைத் தொகுதிகளில் இருக்கும் 5 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அந்த 5 வாக்குச்சாவடிகளிலும் இன்று திங்கள்கிழமை மறுதேர்தல் நடைபெற்று வருகிறது. 

களத்தில் உள்ள மத்திய அமைச்சர்கள்: லக்னௌ தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் மீண்டும் களத்தில் உள்ளார். இத்தொகுதியில் சமாஜவாதி வேட்பாளராக நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், ஜெயந்த் சின்ஹா, அர்ஜுன் ராம் மேக்வால், வீரேந்திர குமார் கடிக், பாஜக எம்பிக்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, அஜய் நிஷாத், பிரகலாத் படேல், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரரும், பிகார் அமைச்சருமான பசுபதி குமார் பாரஸ், காங்கிரஸ் எம்எல்ஏவும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான கிருஷ்ணா புனியா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பன்வார் ஜிதேந்திர சிங், ஜிதின் பிரசாத் உள்ளிட்டோர் களத்தில் உள்ள முக்கியமானவர்கள் ஆவர்.

LS polls: Polling for fifth phase begins in 51 constituencies, spread across 7 states

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com