அமராவதி: ஆந்திர சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 94 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நாடகளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 176 இடங்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 151 இடங்களில் வென்று ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வரும் வியாழனன்று பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 94 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து 'அசோசியேஷன் ஆப் டெமாக்ரட்டிக் ரீபார்ம்ஸ் (ஏ.டி.ஆர்)' என்னும் அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
மொத்தம் தேர்வான 174 எம்.எல்.ஏ.க்களில் 163 பேர் கோடீஸ்வரர்கள் . அதிலும் பெரும்பாலானவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
ஒரு எம்.எல்.ஏ.வுவின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 27 கோடியே 87 லட்சம் ரூபாய். அதில் 668 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்திலும், 510 கோடி ஜெகன்மோகன் ரெட்டி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இவ்வாறு அந்த புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.