
ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்கும் விழாவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்வராக நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜெகன்மோகன் ரெட்டி தனிப்பட்ட முறையில் கடந்த திங்கள்கிழமை தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தெலுங்கு தேசம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஒரு குழு, ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பதற்கு முன்னதாகவே அவரது இல்லத்துக்குச் சென்று வாழ்த்து தெரிவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும், சந்திரபாபு நாயுடுவின் வாழ்த்துக் கடிதத்தையும் இந்த குழு ஜெகன்மோகன் ரெட்டியிடம் கொடுக்கவுள்ளது. இந்தக் குழுவில், தெலுங்கு தேசம் தலைவர்கள் அட்சன் நாயுடு, பி. கேஷவ் மற்றும் ஜி. ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக, தெலுங்கு தேசம் வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
"இந்த பதவியேற்பு விழா ராஜ் பவனில் நடைபெற்றால் பரவாயில்லை. பொது இடத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது உகந்ததாக இருக்காது. அதனால் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் சிலர் அடங்கிய குழு ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டார்" என்றனர்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 இடங்களில் 151 இடங்களில் வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.