காற்று மாசு.. தில்லியில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்; நவ.5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தில்லியில் தீபாவளிக்குப் பிறகு ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடித்ததால், தில்லியில் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
Public health emergency in Delhi
Public health emergency in Delhi

புது தில்லி: தில்லியில் தீபாவளிக்குப் பிறகு ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடித்ததால், தில்லியில் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

தில்லியில் நிலவும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளதால், பள்ளிச் சிறார்களுக்கு முகக் கவசம் வழங்கும் பணியை கேஜ்ரிவால் தலைமையிலான அரசு தொடங்கியிருந்த நிலையில், 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொடர்ந்து விவசாயக் கழிவுகளை எரிப்பதால், தில்லியில் காற்று மாசு உயர்ந்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக பகல் பொழுது முழுவதும் தில்லி நகா்ப் பகுதியே புகை மண்டலம் போல் காணப்பட்டது. தில்லியின் காற்று மாசு அளவு கடும் மோசம் பிளஸ் பிரிவிலேயே நீடிப்பதால், தில்லி - என்சிஆர் பகுதிகளில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தில்லியில் எங்குமே பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது.

காற்று மாசு காரணமாக தில்லி மக்கள் சுவாசம் தொடா்புடைய உடல் நலப் பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா்.

தில்லியில் தீபாவளியின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாசுவின் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகளாலும் காற்று மாசு திங்கள், செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் அதிகரித்தது. பல இடங்களிலும் காற்று மாசு கடுமையான பிரிவில் காணப்பட்டது.

தில்லி - என்சிஆர் பகுதியில் வெள்ளிக்கிழமை முற்பகல் 12.30 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரம் 582 புள்ளிகளாக உயர்ந்தது.

வியாழக்கிழமை காலை 8 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரம் 408 புள்ளிகளாக இருந்த நிலையில், காற்றின் மாசு வெள்ளிக்கிழமை கடும் மோசம் என்ற நிலையை அடைந்ததால், தில்லியில் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இரவில் மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பகல் நேரத்திலும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் நல்லது பிரிவிலும், 51-100 வரை இருந்தால் திருப்தி பிரிவிலும், 101-200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201-300 வரை இருந்தால் மோசம் பிரிவிலும், 301 -400 வரை இருந்தால் மிகவும் மோசம் பிரிவிலும், 401 -500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையான பிரிவிலும் கணக்கிடப்படுகிறது.

‘பட்டாசு புகை மாசுவில் இருந்து தில்லி மீண்ட பிறகு, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் மீண்டும் கடுமையான பிரிவுக்கு கீழறங்கியுள்ளது. இதற்கு பயிா்க் கழிவுகள் எரிப்புதான் காரணம். தில்லியில் காற்று மாசுவை இந்த பயிா்க் கழிவுகள்எரிப்பு புதன்கிழமை 35 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்துள்ளது’ என மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த சதவீதம் வியாழக்கிழமை 27 ஆக இருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.

தில்லியில் கடுமையான மாசுள்ள பகுதியாக வாஜிப்பூா், ஆனந்த் விஹாா், அசோக் விஹாா், விவேக் விஹாா், பவானா ஆகிய பகுதிகளை தில்லி அரசு அடையாளம் கண்டுள்ளது.

மாசுவின் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இதனால், முகக் கவசம் அணிந்து வெளியில் செல்லுமாறும், அதிகாலையிலும், இரவிலும் மாசுபடுத்திகள் வளிமண்டலத்தில் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரங்களில் திறந்தவெளியில் நடந்து செல்வதை தவிா்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com