இந்த எருமை மாட்டின் விலை ஜஸ்ட் ரூ.14 கோடி! இனி யாரையும் எருமைன்னு திட்ட மாட்டீங்களே?!
ஜெய்ப்பூர்: கால்நடைகளின் கண்காட்சி என்றால் வெறுமனே கால்நடைகளை வாங்குவோர், விற்போருக்கு மட்டுமே முக்கியச் செய்தியாக இருக்கும்.
ஆனால், ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சி, பலருக்கும் முக்கியச் செய்தியாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் முர்ரா இனத்தைச் சேர்ந்த எருமை மாடுதான். அதன் பெயர் பீமா.
பீமா.. இதனை எருமை மாடு என்று மட்டும் சொல்லி விட்டுவிட முடியாது. அது பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். சரி சில விஷயங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
அதன் எடை 1,300 கிலோ கிராம். வயது ஆறரை ஆண்டுகள். இதன் விலை எவ்வளவு தெரியுமா ரூ.14 கோடி. ஆண்டுதோறும் நடைபெறும் கால்நடை கண்காட்சியில் இரண்டாவது முறையாக இந்த மாடு இடம்பெற்றுள்ளது.
ஜோத்புரில் இருந்து இந்த எருமை மாடு அதன் உரிமையாளர் ஜவகர் லால் ஜாங்கிட் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஜாங்கிட் உள்ளிட்ட குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு கண்காட்சியில் இடம்பெற வைக்கப்பட்டது.
முதல் நாளிலேயே, கண்காட்சிக்கு வருவோர் அனைவரின் பார்வையையும் கொள்ளையடித்தது இந்த பீமாதான். அனைவரும் இந்த மாட்டின் அருகே நின்று கொண்டு புகைப்படத்தை எடுத்துக் கொள்ள மறக்கவில்லை.
இந்த மாட்டின் பராமரிப்பு குறித்து படிக்கலாமா?
இந்த மாட்டுக்கு பராமரிப்பு மற்றும் உணவுக்காக மாதத்துக்கு ரூ.1.5 லட்சம் செலவாகிறதாம். இந்த மாட்டுக்கு தினமும் ஒரு கிலோ நெய், அரைக் கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லிட்டர் பால், ஒரு கிலோ முந்திரி-பாதாம் ஆகியவற்றைக் கொடுத்து வளர்ப்பதாக ஜவகர் கூறுகிறார். (மனதுக்குள் என்ன நினைத்தாலும் வெளியே சொல்லிவிடாதீர்கள்.. அருகில் யாராவது கேட்டுவிடப் போகிறார்கள்)
சரி நேராக விஷயத்துக்கு வருவோம். இந்த கண்காட்சியில் பங்கேற்கும் முன்பு பீமா மாட்டை ரூ.14 கோடிக்கு கேட்டார்கள். ஆனால் இதை விற்க எங்களுக்கு மனம் வரவில்லை. இந்த கண்காட்சிக்கே கூட எருமைகளை பொதுவாக விற்பனைக்குக் கொண்டு வருவதில்லை. ஆனால் முர்ரா இனத்தை பாதுகாத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சிக்கு பீமாவை அழைத்து வருகிறோம் என்கிறார் ஜவகரின் மகன் அரவிந்த்.
கடந்த ஆண்டை விட, பீமாவின் உடல் எடை 100 கிலோ அளவுக்கு கூடியுள்ளது. அதே சமயம், அதன் விலையும் 2 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.