பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூருக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குழுவில் முக்கியப் பதவி!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 
பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூருக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குழுவில் முக்கியப் பதவி!
Published on
Updated on
1 min read

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாகூர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

2008ம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர் உடல்நிலைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதன்பின்னர், பாஜகவின் ஆதரவுடன் மத்தியப் பிரதேசம் போபால் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், ஆயுத சட்டம் உள்ளிட்டவைகளில் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், மலேகான் வழக்கில் குற்றவாளியாகக்  கருத்தப்பட்ட அவர், தற்போது பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 பேர் கொண்ட நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில்  பிரக்யா சிங் தாகூரும் இடம்பெறுகிறார். நமது நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியப் பங்காற்றும் இந்த நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் பிரக்யாசிங் தாகூர் இடம்பெற்றதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இதுகுறித்து காங்கிரஸ் செயலாளர் பிரணவ் ஜா கூறுகையில், ' பிரக்யா சிங் தாகூரை நாடாளுமன்றக் குழுவில் சேர்ப்பது பாதுகாப்பானது அல்ல. ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. தற்போது எந்த ஒரு அமைப்பும் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவதில்லை. அதைத் தாண்டி சில முடிவுகள் தார்மீக அடிப்படையிலும் எடுக்கப்படுகின்றன. இது கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளார். 

மேலும், நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில், பாஜக உறுப்பினர்கள் தவிர காங்கிரஸ் கட்சியின் பரூக் அப்துல்லா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இடம்பெற்றுள்ளனர். 

பிரக்யா சிங் தாகூர், 'மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை 'தேசபக்தர்' என்று  கூறியது, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தனக்கும் பங்கு இருப்பதாகவும், அதற்காக பெருமிதம் கொள்வதாகவும் கூறியது' உள்ளிட்டவை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும், சர்ச்சைக்குரிய கருத்துகளை பரப்புவதற்கு, பாஜக தலைமை, தாகூருக்கு பலமுறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com