

மகாராஷ்டிராவில், பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு சனிக்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டது. முன்னதாக சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் கட்சி - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைப்பதாக முடிவான நிலையில், இறுதி நேரத்தில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டது. அதிகாலையில் மகாராஷ்டிராவில் பிறப்பிக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டு, காலை 7.30 மணியளவில் மகாராஷ்டிராவின் முதல்வராக தேவேந்திர பட்னவீஸூம், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு வரை சிவசேனை தலைமையில் கூட்டணி அரசு ஆட்சி அமைக்க உள்ளதாகவும், அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், காலையில் தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்றுக்கொண்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த செயல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்புமுனை போலவே உத்தரப் பிரதேச மாநிலத்திலும் 1989ல் ஒரு அரசியல் திருப்புமுனை நிகழ்வு நடந்துள்ளது.
1988ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தலைமையில், ஜனதா கட்சி, ஜன் மோர்ச்சா, லோக் தளம் (ஏ) மற்றும் லோக் தளம்(பி) ஆகிய கட்சிகள் இணைந்து 'ஜனதா தளம்' உருவானது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஜனதா தளம் சார்பில் சவுத்ரி அஜித் சிங் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தேர்தலில் ஜனதா தளம் 208 இடங்களை வென்றது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படுவதற்கு முன்னதாக மொத்தமாக 425 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 213 இடங்கள் தேவைப்பட்டது. ஜனதா தளம் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டனர். இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஜனதா தளம் முடிவெடுத்தது.
சவுத்ரி அஜித் சிங் முதல்வராகவும், முலாயம் சிங் யாதவ் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டதாக அப்போதைய பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் அறிவித்திருந்தார். இதையடுத்து, பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தொடங்கின. அந்த சமயத்தில் துணை முதல்வர் பதவியை முலாயம் சிங் நிராகரித்தார். அவர் தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று கூறியதோடு, ஜான் மோர்ச்சா பிரிவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டார்.
அந்த சமயத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் முதல்வரை முடிவு செய்ய அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தயாரானார். மூத்த தலைவர்கள் மது தண்ட்வடே, முப்தி முகமது சயீத் மற்றும் சிம்மன்பாய் படேல் ஆகியோர் லக்னோவுக்கு பார்வையாளர்களாக அனுப்பப்பட்டனர். இந்த ரகசிய வாக்கெடுப்பில் முலாயம் சிங் வெற்றி பெற்று டிசம்பர் 5, 1989 அன்று முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார்.
அதன்பிறகு, முலாயம் சிங் யாதவ், உத்தரப் பிரதேச அரசியலில் ஒரு முக்கிய நபராக மாறினார். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் மகன் சவுத்ரி அஜித் சிங்தான் முதல்வராவார் என்று பதவியேற்பு விழா கூட தயாரான நிலையில் திருப்புமுனையாக முலாயம் சிங் யாதவ் முதல்வராக பதவியேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் 1992ல், முலாயம் சிங், ஜனதா தளத்திலிருந்து பிரிந்து தனியாக, சமாஜ்வாடி கட்சியை உருவாக்கினார். அதே நேரத்தில் அஜித் சிங் 1998 இல் தனது ராஷ்டிரிய லோக் தள கட்சியை உருவாக்கினார். இந்த இரு கட்சிகளும் பல நேரங்களில் சிறிது ஒன்றிணைந்தாலும், இரு கட்சித் தலைவர்களிடையே இன்னும் முழு உடன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.