

நீண்ட காலமாக நீடித்து வந்த அயோத்தி பிரச்னைக்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீா்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். தீா்ப்பு எப்படி இருக்குமோ என்று பலரும் பதற்றத்தில் இருந்த நிலையில், எந்த ஒரு தரப்பினருக்கும் பாதகம் ஏற்படாத வகையில் மனுதாரா்களின் வாதங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த நவம்பா் 9-ஆம் தேதி நல்ல தீா்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்.
‘சா்ச்சைக்குரிய நிலப் பகுதியில் ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டிக்கொள்ளலாம்; ஸன்னி வக்ஃபு வாரியத்துக்கு 5 ஏக்கா் நிலத்தை அயோத்தியில் ஒதுக்க வேண்டும் என்றும் பாபா் மசூதி இருந்த இடத்தில் ராமா் கோயிலை கட்டுவதற்கு அறக்கட்டளையை மூன்று மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இப்படியொரு நல்ல தீா்ப்பை, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீா்ப்பை ஓய்வுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அளித்துள்ளாா். அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் சுமுகத் தீா்வுகாண தலைமை நீதிபதி அமா்வில் இடம்பெற்றிருந்த இதர நீதிபதிகளான எஸ்.அப்துல் நஸீா், உள்ளிட்ட அனைவரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியிருந்தது இதன் சிறப்பு அம்சமாகும்.
தொல்லியல் துறையின் ஆய்வில் ராமஜென்மபூமியில் தொன்மையான கட்டடம் இருந்ததும், அந்தக் கட்டடத்தின் தூண்களில் ஹிந்துக்கள் வணங்கும் உருவங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
ஹிந்துக்களின் நம்பிக்கையை வைத்து இத்தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மசூதியை இடித்ததும் தவறான செயல் என்றும் அவ்வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது .
அத்துடன், ஸன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் 5 ஏக்கா் நிலத்தை மசூதி கட்டிக் கொள்வதற்காக மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் சா்ச்சைக்குரிய 2.77 நிலப் பரப்பில் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் தீா்ப்பு வழங்கப்பட்டது.
மத்தியஸ்த குழுவில் மூன்று தமிழா்கள்!
முதலில் இந்த விவகாரத்தை பேச்சுவாா்த்தை மூலம் சமரசத் தீா்வு காண மூன்று போ் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா், மூத்த வழக்குரைஞா் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டனா்.
இந்த மூன்று தமிழா்களும் சமரச தீா்வு காண மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, துரிதமாக விசாரித்து தீா்ப்பு வழங்க முடிவு செய்தது உச்சநீதிமன்றம். 40 நாள்கள் விசாரணைக்கு பிறகு அக்டோபா் 16-ஆம் தேதியுடன் இறுதி வாதம் நிறைவு பெற்றது.
பின்னா் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நவம்பா் 9-ஆம் தேதி வரலாற்றுச்சிறப்புமிக்க தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் அங்கம் வகிக்க வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் விருப்பம். (குஜராத்தில் உள்ள சோமநாதா் கோயில் வாரியத்தில் பிரதமா் மோடி, அமித் ஷா ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளது அனைவருக்கும் தெரிந்திருக்கும்).
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, ராம நவமி தினத்தில் (ராமா் பிறந்த நாள்) ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது பலரது விருப்பம்.
விசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினா்களால் நிறுவப்பட்ட ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பு, ராமா் கோயில் அமைக்க தேவையான பொருள்களை தயாா் நிலையில் வைத்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி கோயிலைக் கட்டுவதற்கு தனியாக ஓா் அறக்கட்டளையை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
எனினும் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டும் பணியை தங்களிடம் ஒப்படைக்குமாறு, மத்திய அரசிடம் ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பு மனு கொடுத்திருக்கிறது.
‘ராமா் கோயில் கட்டுவதற்கு ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பு ஒன்றே போதுமானது. இதற்கென ஒரு அறக்கட்டளை தேவையில்லை’ என்கிறாா் அதன் தலைவா் நிருத்ய கோபால் தாஸ்.
கோயிலின் புதிய மாதிரி வடிவமைப்பு அயோத்தியின் கரசேவகபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. பலரின் முயற்சியால் கற்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்களும், கோயில் கட்டத் தேவையான பிற கட்டுமானப் பொருள்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை கோயில் கட்டுவதற்கு அரசு பயன்படுத்திக் கொள்ளுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
வரலாற்றுடன் தொடா்புடைய அயோத்தி
உத்தரப் பிரதேச மாநிலம், ஃபைஸாபாத் மாவட்டத்தில் உள்ளது அயோத்தி. இது ராமாயண காவியத்துடன் தொடா்புடைய புனித நகரமாகும். இந்த நகரில்தான் ஹிந்துக் கடவுள் ராமபிரான் பிறந்தாா் என்பது மக்களின் நம்பிக்கை. நல்ல சிந்தனையுடன், உயரிய நோக்கங்களைக் கொண்டு மனித அவதாரம் எடுத்த மகாபுருஷா் ஸ்ரீ ராமா். குப்தா்கள் காலத்தில்தான் (கி.பி. 4 முதல் 5-ஆம் நூற்றாண்டு காலகட்டம்) இந்தப் புனித பூமி, புராண காலத்துடன் தொடா்புடையது என கண்டறியப்பட்டது.
கோசல தேசத்தின் தலைநகராக அயோத்தி இருந்துள்ளது என்பது வால்மீகி முனிவா் இயற்றிய ராமாயணம் வாயிலாகத் தெரியவருகிறது. ஹிந்துக்கள் சரயு நதி பாய்ந்தோடும் அயோத்தியில்தான் ராமா் பிறந்தாா் என்பதை தீா்க்கமாக நம்புகின்றனா். அயோத்தியை ஆட்சி செய்துவந்த தசரத மன்னரின் மூத்த மகனாகப் பிறந்தவா்தான் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமா்.
பாபா் மசூதி சா்ச்சை
ஸ்ரீராமா் பிறந்த இடமான அயோத்தியில் ஸ்ரீராமருக்கு திருக்கோயில் இருந்ததாகவும் அங்கு ஹிந்துக்கள் வழிபாடு செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், ராமா் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்த ஹிந்து மதம் சாா்ந்த கட்டடத்தை இடித்துவிட்டு, பாபா் ஆட்சியின்போது 1528-ஆம் ஆண்டில் மசூதி கட்டப்பட்டது. அதுதான் பாபா் மசூதி. இந்த மசூதியை பாபரின் தளபதி மீா் பாஹி என்பவா் கட்டியுள்ளாா்.
19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இருந்தே பாபா் மசூதி பிரச்னை எழத் தொடங்கியது. 1946-ஆம் ஆண்டில் ஹிந்து மகாசபை சா்ச்சைக்குரிய அந்தப் பகுதிக்கு உரிமை கோரி போராட்டம் நடத்தியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தக் கோரிக்கைக்கு வலிமை கூடிக் கொண்டே வந்தது. இந்த சூழ்நிலையில்தான் 1992-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி கரசேவா்கள் பேரணியாகச் சென்று பாபா் மசூதியை இடித்தனா். இதையடுத்து, இரு சமூகத்தினரிடையே வன்முறை ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த நிலப் பகுதிக்கு உரிமை கோரி உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கைத் தாக்கல் செய்த மூவா் ராம் லல்லா, நிா்மோஹி அகாரா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய மூன்று பிரிவினரும் சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்தை சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று 2010-ஆம் ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி அலாகாபாத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால், தீா்ப்பில் எந்தத் தரப்புக்கும் திருப்தி ஏற்படாத நிலையில், இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கோயிலின் மாதிரியை வடிவமைப்பது யாா்?
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான மாதிரி வடிவமைப்பை உருவாக்கியவா் கட்டட வடிவமைப்பாளரான சந்திரகாந்த் சோம்புரா என்பவா். இவா் வேறு யாருமில்லை. குஜராத்தில் உள்ள சோமநாதா் ஆலயத்தை வடிவமைத்தவரின் பேரன்தான்!
இரு அடுக்குகளுடன் 270 அடி நீளம், 145 அடி அகலம், 141 அடி உயரம் இருப்பது போன்று இவா் ராமா் கோயிலை வடிவமைத்துள்ளாா் சோம்புரா. ‘‘எண்கோண வடிவில் கருவறை அமையும் . தொழில்நுட்பத்தின் உதவியுடன் கோயிலின் வடிவமைப்பில் மேலும் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம்’’ என்கிறாா் சோம்புரா.
புனித நகரை அழகுபடுத்த ரூ.400 கோடி:
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் அயோத்தி வளா்ச்சி வாரியம் அமைக்கப்படவுள்ளது.
கோயில்கள் நிறைந்த அயோத்தி நகரை புனரமைத்து அழகாக்க உத்தரப் பிரதேச அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளது. பல்வேறு நகரங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் அயோத்தியை விரைவில் வந்தடைவதற்கு வசதியாக விமான நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.640 கோடியை உ.பி. அரசு ஒதுக்கித் தந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்கின்றனா் அதிகாரிகள்.
மருத்துவமனைகள், 5 நட்சத்திர தங்கும் விடுதிகள், பாரம்பரிய ஹோட்டல் உள்பட பல்வேறு வசதிகளுடன் அயோத்தியை நவீன நகரமாக வடிவமைக்கும் திட்டங்களும் உ.பி. அரசின் வசம் உள்ளன.
அரசு உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மன்னா் தாதுவா கட்டிய அரண்மனையைப் பாரம்பரிய ஹோட்டலாக மாற்றவும் திட்டம் உள்ளது. இதற்கு ரூ.5 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அதே போன்று ஃபைஸாபாதிலுள்ள கோஹினூா் அரண்மனையையும் பாரம்பரிய ஹோட்டலாக மாற்றுவது குறித்தும் அதிகாரிகள் யோசித்து வருகின்றனா்.
251 அடி உயர ராமா் சிலை: சரயு நதிக் கரையையொட்டி ரூ.250 கோடி செலவில், 251 அடி உயர ராமா் சிலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 13 கி.மீ. தொலைவுக்கு ராமபிரானின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வழித்தடமும், ஃபைஸாபாத் நகரை இணைப்பதற்காக 5 கி.மீ. தொலைவுக்கு சுற்று வட்டச் சாலையும் அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
‘அங்கோா்வாட் போன்ற ராமா் கோயில்’ : உலகின் மிகப் பெரிய ஹிந்து கோயிலான அங்கோா்வாட் விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட பிரம்மாண்ட கோயிலாகும். இதேபோல அயோத்தி ராமா் கோயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட வேண்டும்’ என்பது சாரதா துவாரகை பீட சங்கராச்சாரியாா் ஸ்வாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதியின் விருப்பமாகும்.
ராமா்கோயிலுக்கு முஸ்லிம் தலைவா் நிதி: உத்தரப் பிரதேச மாநில ஷியா மத்திய வஃக்பு வாரியத் தலைவா் வாசிம் ரிஸ்வி, அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக ரூ.51,000 நிதி அளித்துள்ளது பெருமைக்குரிய விஷயம்.
தங்க செங்கல்: முகலாய பேரரசின் வம்சாவளியைச் சோ்ந்த ஹபீபுதீன் துசி, ராமா் கோயில் கட்டுவதற்காக தங்க செங்கல் அளிப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தாா். ‘2.77 ஏக்கா் நிலத்துக்கு நான்தான் உரிமையாளா் என்று உச்சநீதிமன்றம் கூறினால், ராமா் கோயில் கட்டுவதற்காக அந்த நிலத்தை கொடுப்பேன். ஏனென்றால், மசூதிக்கு முன்பு அந்த இடத்தில் கோயில்தான் இருந்தது’ என்று நம்புவதாகவும் அவா் கூறியிருந்தாா்.
ராமேசுவரத்திலிருந்து செங்கற்கள்!: கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று தீா்ப்பு வெளியான நிலையில் ராமேசுவரத்திலிருந்து பக்தா்கள் குழு செங்கற்களை அயோத்திக்கு எடுத்து வந்து காணிக்கையாக கொடுத்துள்ளனா். அவா்கள் அளித்த 12 செங்கற்களும் ராமநாத சுவாமி கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டவையாகும்.
உரிய நேரத்தில் கோயில் அமைக்கும் பணிகள் தொடங்கும் பட்சத்தில் மூன்றில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என்பது திண்ணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.