அரசியல் சாசனத்துக்கு எதிராக சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது: தேவேந்திர ஃபட்னவீஸ்

விதிகளை மீறி சிறப்புக்கூட்டத்தொடர் நடத்தப்பட்டதாக மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக அமளியில் ஈடுபட்டது. 
அரசியல் சாசனத்துக்கு எதிராக சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது: தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சனிக்கிழமை, முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திலீப் வாலேஸ் பாட்டீல், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். 

இதற்கான சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, விதிகளை மீறி சிறப்புக்கூட்டத்தொடர் நடத்தப்பட்டதாக மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக அமளியில் ஈடுபட்டது. 

பேரவையில் பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசுகையில்,

இந்த சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி நடத்தப்படவில்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. குறைந்தபட்சம் இங்கு கடைபிடிக்கப்படும் மரபான, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு வந்தே மாதரம் கூட இசைக்கப்படவில்லை. மகாராஷ்டிர பேரவை வரலாற்றிலேயே பேரவதை் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இங்கு எனது பேச்சுரிமை மறுக்கப்பட்டால், நான் அவையில் இருப்பதில் அர்த்தமில்லை என்று கூறினார். 

தேவேந்திர ஃபட்னவீஸுக்கு பதிலளிக்கும் விதமாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவர் திலீப் வாலேஸ் பாட்டீல் பேசுகையில், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கவனத்தை திசை திருப்பி அமளியில் ஈடுபட வேண்டுமென்றே பாஜக-வின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்த சிறப்பு கூட்டத்தொடரை நடத்த ஆளுநர் சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.

எனவே சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது. எனவே உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் அவை வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com