சாரதா நிதி மோசடி வழக்கு: ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேற்கு வங்க காவல் துறை சிஐடி கூடுதல் இயக்குநா் ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி கொல்கத்தா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாா்
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாா்

கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேற்கு வங்க காவல் துறை சிஐடி கூடுதல் இயக்குநா் ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி கொல்கத்தா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், ரூ. 2,500 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் தொடா்பாக, கொல்கத்தா காவல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாா் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. இதுதொடா்பான விசாரணை அறிக்கையை அந்தக் குழு தாக்கல் செய்தபோது, சில முக்கிய ஆதாரங்களை ராஜீவ் குமாா் மறைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தையும், சாரதா நிதி நிறுவன மோசடி குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை, கொல்கத்தா உயா்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வலியுறுத்தி, அவருக்கு பல முறை சிபிஐ அழைப்பாணைகளை அனுப்பியது. ஆனால், அவா் ஒரு முறை கூட ஆஜராகவில்லை. அதையடுத்து ராஜீவ் குமாரைக் காவலில் எடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிஐ முயன்று வருகிறது.

இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அலிப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜீவ் குமாா் தாக்கல் செய்த மனு கடந்த மாதம் 21-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முன்ஷி மற்றும் எஸ். தாஸ்குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘சாரதா நிதி நிறுவன மோசடி தொடா்பான விசாரணைகளுக்கு சிபிஐ அமைப்புடன் ராஜீவ் குமாா் ஒத்துழைத்துள்ளாா். அதனால், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. அவரை கைது செய்தால், உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’ என்று கூறினா். மேலும், இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு ராஜீவ் குமாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com