கர்தார்பூர் செல்ல பாஸ்போர்ட் அவசியம்!

பாகிஸ்தானில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா செல்ல யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் வைத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. 
கர்தார்பூர் செல்ல பாஸ்போர்ட் அவசியம்!
Published on
Updated on
1 min read


பாகிஸ்தானில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா செல்ல யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் வைத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. 

சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். 

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்த வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

இதன் திறப்பு விழாவின் எல்லை தாண்டி கர்தார்பூருக்கு செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமை ஏற்கவுள்ளார். இதன்பிறகு, குருத்வாராவுக்கு தினசரி 5,000 யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்ளலாம்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் நேற்று (செவ்வாய்கிழமை) உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு தரப்பிலும் சில அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில அரசு நிர்வாகி ஒருவர் ஐஏஎன்எஸ் அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவிக்கையில், " பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக ஆதார் போன்ற இதர அரசு ஆவணங்களையும் பயன்படுத்துவதற்கு முதல்வர் அமரீந்தர் சிங் பரிந்துரைத்தார். யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு துரிதமான மற்றும் எளிமையான நடைமுறையை உறுதிப்படுத்த வேண்டும் என்று சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலரை கேட்டுக்கொண்டார்.

யாத்ரீகர்களுக்கு உதவும் வகையில், மாநிலம் முழுவதும் உடனடியாக பாஸ்போர்ட் முகாம்களை அமைக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரையும் அமரீந்தர் சிங் கேட்டுக்கொண்டார்" என்றார்.

இதுகுறித்து பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கர்தார்பூர் வழியாக பாகிஸ்தான் செல்ல விருப்பம் உள்ள யாத்ரீகர்களுக்காக, அக்டோபர் 4-ஆம் தேதி இணையதளம் தொடங்கவுள்ளது. பாஸ்போர்ட் இல்லாத மக்களுக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் இல்லாதவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களில் அல்லது தபால் நிலையங்களில் ரூ. 1500 செலுத்தி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைத்த பிறகு, ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் ஒரிரு நாட்களில் நிறைவடைந்துவிடும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com