சொன்னதை செய்துகாட்டிய ஜெகன் மோகன் ரெட்டி..! 80% வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை..!

ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு அரசுப்பணி ஆணை வழங்கி அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரலாற்று  சாதனை படைத்துள்ளார்.
சொன்னதை செய்துகாட்டிய ஜெகன் மோகன் ரெட்டி..! 80% வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை..!
Published on
Updated on
2 min read

ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு அரசுப்பணி ஆணை வழங்கி அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரலாற்று  சாதனை படைத்துள்ளார்.

முதல்வரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பல வலம் வருகின்றன. பாகுபாடின்றி இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநில மக்களும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

ஆந்திர மாநில முதல்வராக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த மே மாதம் 30ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற உடனேயே சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ஆணை பிறப்பித்தார்.

தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவித்தொகை, விவசாயிகளுக்கு உதவித்தொகை, விவசாயத்திற்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம், காவல்துறையினருக்கு வார விடுமுறை, சட்டவிரோத மதுபானக் கடைகள் அகற்றுதல், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துதல், முதியோர்களுக்கான ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு, மக்களுக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் என பல அதிரடித் திட்டங்களை அறிவித்ததுடன் செயல்படுத்தியும் வருகிறார். 

கல்வித்துறையில் ஒரு பெரும் மாற்றமாக, சனிக்கிழமைகளில் மாணவர்கள் புத்தகப் பையுடன் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை, அந்நாளில் படிப்பு அல்லாத பிற திறன்களை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு அளித்திருந்தனர். 

இதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் 75% ஆந்திரா மக்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறினார். மேலும், கிராமச் செயலகங்கள் மற்றும் வார்டு செயலகங்கள் மூலமாக 1.98 லட்சம் பேருக்கு அரசுப்பணியை வழங்குகிறார். 

கிராமச் செயலகங்கள் மற்றும் வார்டு செயலகங்களில் தலா 10 பேர் வீதம் பணியாற்ற எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் மட்டும் எழுத்துத் தேர்வில் தேர்வாகினர். இதில், முதற்கட்டமாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 72,000 பேருக்கு விரைவில் பணி வழங்கப்படவுள்ளது. 

இதுவரை எந்த ஒரு மாநிலத்திலும் ஒரே நாளில் இவ்வளவு அரசுப்பணிகள் வழங்கப்பட்டதில்லை. அதிலும், அரசுப்பணி வழங்கப்பட்ட 1.26 லட்சம் பேரில் 90% அதிகமானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்குறிப்பிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் வாக்குறுதிகளில் 80% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாகவே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, 3,648 கி.மீ தூரத்திற்கு நடத்திய பிரஜா சங்கல்ப் பாதயாத்திரையை நடத்திய போது 'நவரத்னலு' என்ற ஒன்பது முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றது முதலே இந்த ஒன்பது வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு மும்முரமாக இருந்தது.

அதன்படி தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் வேலைவாய்ப்பு, சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட 80% வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற முன்மொழிந்து அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com