
அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் நாளை நிறைவடையவுள்ளதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில், 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரி சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் அக்டோபர் 18-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தது. அதன்பிறகு, அது அக்டோபர் 17-ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவிக்கையில், "இன்று 39-வது நாள். நாளை 40-வது நாள், அதேசமயம் அதுதான் வழக்கு விசாரணையின் கடைசி நாள்" என்று தெரிவித்தார்.
எனவே, வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் இன்னும் ஒருநாள் முன்கூட்டியே நாளை (புதன்கிழமை) நிறைவடையவுள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.