
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 46 இடங்களை அக்கட்சியால் கைப்பற்ற இயலவில்லை. இருப்பினும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து, தில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இல்லத்தில் வியாழக்கிழமை இரவு அவசர சந்திப்பு நடைபெற்றது. இதில், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, ஹரியாணா பாஜக தலைவர் அனில் ஜெயின், பி.எல்.சந்தோஷ், பாஜக எம்.பி. சுனிதா துக்கல் மற்றும் கோபால் கண்டா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.பி. சுனிதா கூறியதாவது, சில கட்சிகளும், சுயேட்சைகளும் பாஜக-வுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக பாஜக தலைவரிடம் தெரிவித்தோம். அவர்கள் அனைவரும் பாஜக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர் என்றார்.
இந்நிலையில், ஹரியாணா லோகித் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான கோபால் கண்டா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்தார். இதையடுத்து சுயேட்சை எம்.எல்.ஏ ரஞ்சித் சிங், பாஜக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளிலும், துஷ்யந்த் செளதாலாவின் ஜேஜேபி 10 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.