பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 'சுமங்லா கன்யா யோஜனா' என்ற பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். 
girl force: unscriptable, unstoppable!
girl force: unscriptable, unstoppable!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 'சுமங்லா கன்யா யோஜனா' என்ற பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைத்தார். மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி உடன் இருந்தார்.

இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைக்கும் ரூ.15,000 வரையில் வழங்கப்படும், இத்திட்டத்தால் மாநில கருவூலத்திற்கு ரூ.1,200 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முக்கியத் துறைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே, பெண் சிசுக்கொலைகளை தடுக்கும் வகையிலும், பெண் குழந்தைகள் கல்வி பெறும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

மேலும், 'பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். பெண்களுக்கான அவசர உதவி எண்கள், கழிப்பறைகள், சமையல் எரிவாயு என பாஜக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. முத்தலாக் போன்ற பெண்களுக்கு எதிரான நடைமுறைகளை ஒழிக்க சட்டம் இயற்றப்படுகிறது' என்று கூறினார். 

'சுமங்லா கன்யா' திட்டம் பெண் குழந்தை பிறந்த காலத்திலிருந்தே பயன்படும். பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்வியை கவனித்துக் கொள்ள வேண்டிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு தடுப்பூசி போடுவது, 1, 5 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்க்கும் போது, பட்டப்படிப்பு முடிக்கும்போது உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்திலும் நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

அதாவது, குழந்தை பிறக்கும் போது ரூ.2,000 கணக்கில் செலுத்தப்படும். குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் ரூ.1,000  என்ற கணக்கில் பட்டப்படிப்பு வரை ரூ.15,000 பகிர்ந்தளிக்கப்படும். 

ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 500 சிறுமிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com