6 மாதங்களுக்குப் பின் விமானப்படைத் தளபதியுடன் இணைந்து மிக்-21 போர் விமானத்தில் பறந்த அபிநந்தன்!

கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இதே மிக்-21 ரக போர் விமானத்தை தான் தற்போது விமானப்படைத் தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
புகைப்பட, விடியோ நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்
புகைப்பட, விடியோ நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்
Published on
Updated on
1 min read

விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா உடன் இணைந்து விங் கமாண்டர் அபிநந்தன், மிக்-21 ரக போர் விமானத்தில் செப்டம்பர் 02, 2019 அன்று மீண்டும் பறந்தார். கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இதே மிக்-21 ரக போர் விமானத்தை தான் தற்போது விமானப்படைத் தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்த பயணத்தையடுத்து விமானப்படைத் தளபதி பேசியதாவது,

அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்கும் பணிக்கு திரும்பிவிட்டார். இதை தான் அனைத்து பைலட்களும் விரும்புவார்கள். நானும் கடந்த 1988-ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு தடைக்காலத்துக்குப் பின் மீண்டும் 9 மாத காலம் கழித்து தான் போர் விமானம் இயக்கினேன். ஆனால், அபிநந்தன் 6 மாதங்களில் இப்பணிக்கு திரும்பிவிட்டார். அபிநந்தனுடன் இணைந்து மிக்-21 ரக போர் விமானத்தில் மீண்டும் பறந்தது மகிழ்ச்சியளிக்கிறது. 

எங்கள் இருவருக்கும் இடையே இரண்டு ஒற்றுமைகள் உள்ளன. முதலாவது: நாங்கள் இருவருமே போர் விமானம் இயக்காமல் தடைக்காலத்தை அனுபவித்தவர்கள். 2-ஆவது: நாங்கள் இருவருமே பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டவர்கள். நான் கார்கிலுக்காக போரிட்டேன், அபிநந்தன், பாலாகோட் பிறகான சம்பவத்தில் பங்கேற்றார். நான் கடைசியாக போர் விமானம் இயக்கிய போது அபிநந்தனின் தந்தையுடன் பயணித்தேன், தற்போது அபிநந்தனுடன் பயணித்துள்ளேன் என்று புகழாரம் சூட்டினார். 

முன்னதாக, புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் பாலாகோட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படையின் மிராஜ் போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன. இதற்கு பதில் தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தான் விமானப் படை எஃப்-16 ரக விமானங்கள் மூலம் இந்திய ராணுவ முகாம்கள் மீது குண்டுவீச முயற்சித்தன.

இதையடுத்து, இந்தியத் தரப்பு மிக்-21 விமானங்கள் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தது. அப்போது, விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினார். அப்போது, அவரது விமானமும் தாக்குதலுக்கு உள்ளானது. பாகிஸ்தான் பகுதியில் பாராசூட் மூலம் குதித்த அவரை, அந்நாட்டு ராணுவம் பிடித்தது. எனினும், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் நெருக்கடியை அடுத்து அவரை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது.

இக்கட்டான சூழ்நிலையில் மிகுந்த திறமையுடன் செயல்பட்டு பாகிஸ்தான் விமானத்தை சுட்டுவீழ்த்தியதுடன், பாகிஸ்தானில் பிடிபட்டபோதும் வீரத்துடன் செயல்பட்ட அபிநந்தனை பிரதமர் மோடி உள்பட தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். மத்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கி கௌரவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com