சிறப்புக் கட்டுரை: தமிழக மக்களின் குரலுக்கு செவி சாய்த்ததா பாஜக?

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், வடமாநிலத்தில் கோலோச்சும் பாரதிய ஜனதா கட்சி என்ற மிகப்பெரிய கட்சியை தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்கு உரியவர்
சிறப்புக் கட்டுரை: தமிழக மக்களின் குரலுக்கு செவி சாய்த்ததா பாஜக?


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், வடமாநிலத்தில் கோலோச்சும் பாரதிய ஜனதா கட்சி என்ற மிகப்பெரிய கட்சியை தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்கு உரிய பெண் தலைவர்  என்று கூறினால் யாராலும் அதனை மறுக்க முடியாது. 1999 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவர், தொடர்ந்து 20 ஆண்டுகளாக கட்சிப் பணி ஆற்றியுள்ளார்.

அவரது தந்தை குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். முதலில் தான் அரசியலுக்கு வருவதையே, தனது தந்தை குமரிஅனந்தன் எதிர்ப்பதாக, தமிழிசையே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அரசியலில் நுழைவதையே எதிர்க்கும் தந்தைக்கு முன்,  எதிர்க்கட்சியில் இணைந்து 20 ஆண்டுகளுக்குப் பின் அவரது உழைப்பிற்கான அங்கீகாரத்தையும் பெற்று, தனது தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது இந்த துணிச்சலுக்கே நாம் ஒரு தனிப்பட்ட பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். 

அரசியல் பயணம்: கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அவர், இடையிடையே தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5,343 வாக்குகள் பெற்றார். 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் பதவி காலியான போது, முதன்முறையாக தமிழிசை சௌந்தரராஜன் அப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார். 

தமிழிசையும், சமூக வலைத்தளமும்: 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தினமும் சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் தமிழிசையின் பெயர் இல்லாமல் இருந்ததில்லை. தற்போதைய காலகட்டத்தில் மக்களிடம் நேரடி தொடர்புகொள்ள சிறந்த சாதனம் என்றால் அது சமூக வலைத்தளங்கள். சமூக வலைத்தளத்தின் மூலமாகவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு புரட்சி உருவானதை நாம் மறக்க முடியாது. 

சமூக வலைத்தளங்களிலோ அல்லது செய்தியாளர்களின் பேட்டியின் போதோ அவர் கூறும் கருத்துக்களால், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், பல தருணங்களில் தான் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் பேசியபோது, என்னுடைய வெளிப்படைத் தோற்றத்தை வைத்து வரும் மீம்ஸ்களை நான் ரசிக்கிறேன் என்றும், அதே நேரத்தில், ஒரு பெண் என்றும் பாராமல் இவ்வாறு கேலி செய்வதாக அவர் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், தனது 20 ஆண்டு கால உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று  கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அவரது உழைப்புக்கு பாஜக இன்று தான் அங்கீகாரம் அளித்தாலும், தமிழக மக்கள் தமிழிசைக்கு எப்போதோ அங்கீகாரம் வழங்கிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். ஏன், தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்ததற்கு தமிழக மக்களும் ஒரு காரணமாக இருக்கலாம். 

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி: 2019 17வது மக்களவைத் தேர்தல் முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகின. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவரின் மகளும், தற்போதைய தலைவரின் சகோதரியுமான திமுக வேட்பாளர் கனிமொழிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில், கனிமொழி வெற்றி பெற்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி ஆனார்.  இந்தத் தேர்தலில் தமிழிசை 2 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றார். 

தேர்தல் தோல்வி குறித்து பேசிய தமிழிசை, 'தமிழக மக்களின் மதிப்பைப் பெறும் அளவிற்குத் தான் தமிழகத்தில் எங்களைப் போன்ற பாஜக தலைவர்கள் நடந்து கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், மக்கள் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்று தெரியவில்லை. மக்களின் மனநிலை குறித்து ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளும் காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். 

எனக்கு தமிழக மக்கள் மீது எந்தக் கோபமும் இல்லை; எனக்காக வாக்களித்தவர்களுக்கு நன்றி. ஆனால், வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் பயன் பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும்' என்று தெரிவித்தார். அவரது இந்தப் பேட்டியின் போது வருத்தப்பட்டவர்கள் பலர் உண்டு. 

இதுவரை செய்தியாளர்கள் விமர்சனங்கள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும், அவர் கோபப்பட்டுச் சென்றார் என்று கூறினால் அதைத் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும். ஏன், அவரை விட அரசியலில் மூத்தவர்களான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அன்புமணி ராமதாஸ் கூட பத்திரிகையாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். ஆனால், பாஜகவை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் பல இடங்களில் பொறுமையாக பேசியுள்ளார். இதனை பத்திரிக்கை நிருபர்கள் பலரும் ஆமோதிக்கின்றனர். 

தமிழகத்தில் மற்ற பாஜக தலைவர்கள் விமர்சனங்களில் சிக்கிக் கொண்டாலும், அதற்கும் பதில் சொல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, அதனையும் செய்து காட்டியுள்ளார். 

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்:  'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்', 'செயற்கை மழையை பொழிய வைத்தாவது தமிழகத்தில் தாமரையை மலர வைப்போம்' என்று தாமரையை மக்கள் மனதில் பதித்தவர். இது விமர்சனத்திற்கு ஆளானாலும், மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய யுக்தியாக நாம் பார்க்கலாம். 

தேர்தல் முடிவுக்குப் பின்னர் 2019 மத்திய அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியானது. தூத்துக்குடியில் கடும் சவால்களுக்கு இடையே போட்டியிட்ட தமிழிசைக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பெயர் இடம்பெறவில்லை. 

பாஜகவில் முக்கியத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், மாநிலங்களவை மூலமாக எம்.பி ஆக்கப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது வழக்கம். தற்போது மத்திய நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் அவ்வாறே மாநிலங்களவை எம்.பியாக இருந்து, 2014 ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், தற்போது  நிதி அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.  

தமிழிசைக்கு ஆதரவாக தமிழக மக்களின் குரல்: ஆனால், அமைச்சரவையில் தமிழிசைக்கு வாய்ப்பிருப்பதாகவே கட்சி சாராத தமிழக மக்கள் பலரும் கருதினர். அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில், இது வெளிப்படையாகத் தெரிந்தது. நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக தமிழிசைக்கு ஏதேனும் ஒரு பதவி வழங்கியிருக்கலாம் என்ற குரல்கள் சமூகவலைத்தளங்களில் எதிரொலித்தன. தமிழிசை அவர்களின் உழைப்பிற்கு பாஜக அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று   சமூக வலைத்தளங்களில் பல கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சாதியம் பார்த்து பதவி வழங்கப்படுகிறதா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். தூத்துக்குடித் தொகுதியில் தமிழிசை பாஜக சார்பில் போட்டியிடாவிட்டால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. இதன்மூலம் தமிழக மக்கள், தமிழிசையை ஒரு அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். 

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் பாஜகவை எதிர்த்து வந்தாலும், ஒரு ஆளுமையான அரசியல் தலைவராக அவர் உருவெடுத்தார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு இடங்களில் நேருக்கு நேர் வார்த்தைகளின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். 'போட்டி இருந்தாலும் பொறாமை இருக்கக்கூடாது என்பதற்கேற்ப மற்ற அரசியல் தலைவர்களுடன் நட்பு பாராட்டியும் வருகிறார். 

பாஜகவின் அங்கீகாரம்: தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து பாஜக, அவரது பணிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்திருப்பது தமிழக மக்களின் சமூக வலைதள கருத்துக்களும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆர்ப்பாட்டமில்லாத எளிய காங்கிரஸ் தலைவரான அவரது தந்தையான குமரி அனந்தனுக்கு ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்றாலும், அவரது மகளும், பாஜக தமிழக தலைவருமான தமிழிசைக்கு குறைந்த வயதிலேயே ஆளுநர் பதவி வழங்கி கெளரவப்படுத்தியதற்கு தமிழக மக்களாகிய நாம் மோடி அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளலாம். 

நான் தெலங்கானாவுக்குச் சென்றாலும், உங்களின் சகோதரி தான்; உங்களது சகோதரி தெலங்கானாவில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழக மக்களுக்காகவும் எனது பணி தொடரும் என்று அவர் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதியாக, தமிழக மக்களுக்கு பாஜக கடமைப் பட்டிருக்கிறதோ, இல்லையோ தமிழிசை கண்டிப்பாக கடமைப்பட்டிருக்கிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com