சிபிஐ கேட்காமலேயே சிதம்பரத்தின் சிபிஐ காவல் 5வது முறையாக 5ம் தேதி வரை நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலில் எடுத்துவிசாரிக்கக் கோரிக்கை வைக்காத நிலையில், சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ கேட்காமலேயே சிதம்பரத்தின் சிபிஐ காவல் 5வது முறையாக 5ம் தேதி வரை நீட்டிப்பு


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலில் எடுத்துவிசாரிக்கக் கோரிக்கை வைக்காத நிலையில், சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரத்தை மேலும் காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை என்றும், சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று சிபிஐ வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிதம்பரத்தை செப்டம்பர் 5ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை சிதம்பரத்தை மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த 21-ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், சிபிஐ காவலில் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கக் கோரி அவரது சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் மனு தாக்கல் செய்தார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு, ப.சிதம்பரத்தை மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை மேலும் ஒரு நாள் நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனிடையே, ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க சிபிஐக்கு சிறிது அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். இதையடுத்து, ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி  தெரிவித்தார்.

திகார் சிறை வேண்டாம்: ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள ப.சிதம்பரம், திகார் சிறைக்குச் செல்வதற்குப் பதிலாக வீட்டுச் சிறையில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தனக்கு எதிராக பிணையில் வெளிவர இயலாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைவதால் அன்றைய தினமே அவரது மனுவை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

அப்போது சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதிடுகையில், இந்த வழக்கு விசாரணைக்காக 12 நாள்களாக ப.சிதம்பரம் சிபிஐ காவலில் உள்ளார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் அல்லது அவரை வீட்டுச் சிறையில் வைக்க வேண்டும் என்றார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட மாட்டார் என்று தெரிவித்தனர்.

மேலும், வழக்கமான ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் விண்ணப்பித்துள்ளாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பதால் வழக்கமான ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று கபில் சிபல் பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com