74 வயதுப் பெண்மணிக்கு செயற்கைக் கருத்தரிப்பில் இரட்டைக் குழந்தைகள்! சாதனையா.. சோதனையா..?

ஒரு பக்கம் முது தம்பதியினர் இந்த வயதில் நம்பிக்கையோடு குழந்தையை பெற்றெடுத்ததை பாராட்டினாலும் மற்றொரு பக்கம் அந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுகிறது.  
74 வயதுப் பெண்மணிக்கு செயற்கைக் கருத்தரிப்பில் இரட்டைக் குழந்தைகள்! சாதனையா.. சோதனையா..?

ஆந்திரப் பிரதேசத்தில் 74 வயது பெண்மணி ஒருவர், ஐ.வி.எப் எனும் செயற்கை கருத்தரித்தல் முறையில், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதற்கு முன்பு கடந்த 2006-இல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 66 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றதே முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதால் இந்த தம்பதியினர் உலக சாதனை படைத்துள்ளனர். 

74 வயது பெண்மணிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள்!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள திராக்ஷாராமம் நகரைச் சேர்ந்தவர் மங்காயம்மா(74). இவருக்கும், ராஜா ராவ் என்பவருக்கும் கடந்த 1962-இல் திருமணம் நடைபெற்றது. இத்தனை ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லை. இதனால் மங்கயம்மாவின் வீட்டருகில் வசிக்கும் 55 வயதுப் பெண்ணின் கருமுட்டையின் உதவியுடன், ஐ.வி.எஃப்(In vitro fertilisation) எனும் செயற்கை முறையில் கருத்தரித்து மங்கயம்மா குழந்தையைப் பெற்றெடுத்தார். இதற்காக, குண்டூரில் உள்ள அகல்யா ஏ.ஆர்.டி கிளினிக்கில் சிகிச்சை பெற்ற அவர், வயது முதிர்வு காரணமாக, கருத்தரித்தல் முதல் கடந்த 9 மாதங்களாக மருத்துவமனையில் தங்கியிருந்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அறுவைச் சிகிச்சை மூலம் அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. 

மருத்துவமனையில் மங்கயம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அருணா கூறும்போது, 74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றது  கண்டிப்பாக உலக சாதனையாக இருக்கும் என்கிறார்.

பெண்ணின் கணவர் ராஜா ராவ் கூறும் போது, 'எங்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை என்பதால் இந்த சமூகம் எங்களை மோசமாக பார்த்தது. பல நேரங்களில் அவமானப்படுத்தியது. இன்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். 

குழந்தைகளின் எதிர்காலம்?

இந்த சம்பவத்தை பார்க்கும் போது, ஒரு பக்கம் முது தம்பதியினர் இந்த வயதில் நம்பிக்கையோடு குழந்தையை பெற்றெடுத்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்த வயதிலும் செயற்கைக் கருத்தரித்தலில் குழந்தை பெற்றெடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். 

மற்றொரு பக்கம், அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுகிறது. ஒருவேளை.. அந்த பெண்மணிக்கோ அல்லது அவரது கணவருக்கோ ஏதேனும் நேரும் பட்சத்தில், அந்த குழந்தைகளின் நிலைமை என்னாவது? இச்செய்தியை படித்த பலருக்கு இந்தக் கேள்வி எழாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. 

அந்தக் குழந்தைகளுக்கு தேவையான வசதிகள், பணம், சொத்துக்கள் அனைத்தும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தால் கூட, இந்தச் சமூகத்தில் குழந்தைகள் தாய் இல்லாமலோ அல்லது தந்தை இல்லாமலோ படும் கஷ்டங்களை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். குறைந்தது 18 வயது வரையிலாவது ஒரு குழந்தைக்கு பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும், அறிவுரையும் அவசியமாகிறது. அதிலும், பெண் குழந்தைகள் என்றால் சற்று கூடுதலாகவே கவனம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு சூழ்நிலைக்குத் தான் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். 

தாய், தந்தையர் இல்லையென்றால் உறவினர்களின் கட்டுப்பாட்டில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்க முடியாது. 

தம்பதிகள் இருவரும் 70 வயதை கடந்த நிலையில், இனி அவர்களின் மன மற்றும் உடல் வலிமை எவ்வாறு இருக்கும்? பெற்றோர்கள் வயதானவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தைகளும் ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் தான் வளரும். சமூகத்திலும் அவர்கள் வித்தியாசமாகவே உணரப்படுவார்கள். அதேபோன்று செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறக்கும் குழந்தைகள் நோய் தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை வந்தால் அதனை பெற்றோர்கள் எந்த  அளவுக்கு சரியாக கையாள முடியும்?

74 வயதில் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை என்றால் அவரது உடல்நிலை இப்போது என்ன நிலையில் இருக்கும்? அவர் எப்படி குழந்தைகளை பார்த்துக்கொள்வார்? இதுபோன்று ஆயிரக்கணக்கான கேள்விகள் உள்ளன. சரி, மருத்துவர்களுக்கு இதுகுறித்த ஒரு விழிப்புணர்வு இருத்திருக்கத்தானே செய்யும். அப்படியென்றால் அவர்கள் இதனை தடுத்திருக்கலாம் இல்லையா? 

மருத்துவர்களின் பொறுப்பற்ற தன்மையா?

தம்பதியினர் தங்களது தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றிருந்தாலும், மருத்துவர்கள் அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கி அவர்களது இளமை காலத்திலேயே செயற்கை கருத்தரித்தல் முறையை கையாண்டிருப்பது அல்லது அதற்கு மாற்றாக குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது போன்ற வழிமுறைகளை காட்டி, இதனை தவிர்த்திருப்பது தான் சரியாக இருந்திருக்கும். 

ஐ.வி.எப் என்ற கருத்தரித்தல் முறையில் 10% முதல் 20% தான் வெற்றி வாய்ப்பிருக்கும் சூழ்நிலையில், அந்த பெண்ணின் உடல்நிலையையும், குழந்தையின் எதிர்காலத்தையும் மருத்துவர்கள்  கவனத்தில் கொள்ளவில்லை என்று தானே எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலமாக, மருத்துவமனைகள் தங்களது நம்பகத்தன்மையை இழப்பதாகவே பேசப்படுகிறது.

நாம் ஓரிரு நாட்கள் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாலே லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில், 9 மாதங்கள் மருத்துவமனையிலே தங்கியிருந்து சிகிச்சை பெற்ற இந்த தம்பதியினர் எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்கள்? பணத்திற்காக மருத்துவமனைகள் இதுபோன்ற செயல்களை ஆதரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதேமுறையை நாளை அனைவரும் பின்பற்ற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?   

பெங்களூருவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, 'பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் இயந்திரம் அல்ல. மாறாக, குழந்தை பெற்றெடுத்தல் என்பது உணர்வுப் பூர்வமானது. குழந்தையை பெற்றெடுக்கும் போது அதன் எதிர்காலம் குறித்து நாம் முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். இந்த தம்பதியினரை பொறுத்தவரை, அவர்கள் இந்த வயதில் செயற்கை கருத்தரித்தலை தவிர்த்திருக்கலாம். அந்த மருத்துவர்கள் எவ்வாறு இதுபோன்ற ஒரு செயலில் ஈடுபட்டார்கள் என்று தெரியவில்லை. இதற்காக மருத்துவர்கள் வெட்கப்படவேண்டும். அரசு இதில் தலையிட்டு மருத்துவர்களுக்கும், மருத்துவமனை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குழந்தை வளரும்போது கண்டிப்பாக மிகப்பெரிய பிரச்னைகளை சந்திக்கும். சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த குழந்தைகள் அனாதையாகும் பட்சத்தில் அதற்கு மருத்துவர்கள் தான் பொறுப்பாவார்கள்" என்று தெரிவித்தார். 

செயற்கை கருத்தரித்தல் - வரைமுறைகள்

இதுகுறித்து சட்டத்தில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்று பார்க்கும் போது நமக்கு சில தகவல்கள் கிடைத்தன. அதன்படி, 'இனப்பெருக்க தொழில்நுட்பம்' (Assisted Reproductive Technology) குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒரு விதிமுறையை வகுத்துள்ளது. அதாவது, ஐ.வி.எப் முறையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு 45 வயதிற்கு மிகாமலும், ஆண்களுக்கு 50 வயது மிகாமலும் இருக்க வேண்டும். கடந்த 2008ம் ஆண்டு முதலாவதாக இதுகுறித்த மசோதாக்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

40 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கும், அந்த குழந்தைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி காணப்படுகிறது; அது குழந்தைகளின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பது மனநல மருத்துவர்களின் ஒரு பொதுவான கருத்து. அப்படி இருக்கையில், வயதான இந்த தம்பதியினருக்கும், அவர்களது குழந்தைகளுக்குமான பிணைப்பு எவ்வாறு இருக்கும்? 

தற்போது சிசேரியன் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சிக்கலான செயற்கை கருத்தரித்தல் முறைகளும் அதிகரிக்கா வண்ணம் சில விதிமுறைகளுடன் சட்டங்களை இயற்றி இதனை சரிசெய்ய வேண்டும் என்பதும் பெரும்பாலான மருத்துவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. செயற்கை கருத்தரித்தல் மையங்களும் இந்த காலகட்டத்தில் அதீத வளர்ச்சி அடைந்து வருவதாகவும் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல இடங்களில் பண மோசடி சம்பவங்களும் அதிகரிக்கின்றன. எனவே முறையான விதிமுறைகளை வகுத்தால் மட்டுமே செயற்கைக் கருத்தரித்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கலாம். 

அரசு இதனை கவனத்தில் எடுக்குமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com