நூறுநாள் ஆட்சி வெறும் ட்ரைலர்தான்; முழுப்படம் இன்னும் வரவில்லை: ராஞ்சியில் மோடி பெருமிதம்   

நூறுநாள் ஆட்சி வெறும் ட்ரைலர்தான்; முழுப்படம் இன்னும் வரவில்லை என்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி
ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

ராஞ்சி: நூறுநாள் ஆட்சி வெறும் ட்ரைலர்தான்; முழுப்படம் இன்னும் வரவில்லை என்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசு சமீபத்தில் தனது நூறு நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி வியாழனன்று மூன்று தேசிய அளவிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் மற்றும் சிறுவணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், பழங்குடியின மாணவர்களுக்கான 462 உறைவிடப் பள்ளிகள், சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் மீன்வளத்தைப்  பெருக்கும் பன்னோக்கு முனையத் திட்டம், ராஞ்சியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் மற்றும் அங்கு புதியதலைமைச் செயலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் திட்டம் உள்ளிட்டவைகளைத் துவங்கிவைத்த பிறகு, ராஞ்சியின் பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:

மத்திய அரசின் முதல் நூறுநாள் ஆட்சி என்பது ட்ரைலர்தான்; முழுப்படம் இன்னும் வரவில்லை. தாங்கள் சட்டத்தை விட உயர்வானவர்கள் என்று கருதியவர்கள் தற்போது பிணை கேட்டு நீதிமன்றத்தில் நிற்கிறார்கள். நான் என்ன உறுதியளித்தேனோஅதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.  செயல்படக்கூடிய திறமை வாய்ந்த ஒரு அரசை உங்களுக்கு அளிப்பதாக நான் உறுதி கூறியிருந்தேன்.

இந்த நூறு நாட்களில் முத்தலாக் தடைச்ச சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதன் காரணமாக இஸ்லாமியப் பெண்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள்.  தீவிரவாத எதிர்ப்புச் சட்டமானது வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் துவக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்குத் தவறிழைத்தவர்கள் தகுந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு நாங்கள் என்ன உறுதியளித்தோமோ அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற பருவகால கூட்டத் தொடரானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. முக்கியமான மசோதாக்கள் இந்தத் தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com