சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான ஜெயகோபால் மீது இதச 308ன் கீழ் வழக்கு: இந்த சட்டப்பிரிவு என்ன சொல்கிறது?

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரணமடைந்த இளம்பெண் சுபஸ்ரீ
மரணமடைந்த இளம்பெண் சுபஸ்ரீ
Published on
Updated on
2 min read

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது 308 பிரிவின் கீழ் பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் பிரிவின் கீழ் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வழக்கில் ஜெயகோபால் உறவினர் மேகநாதன் பெயரையும் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் சேர்த்துள்ளது. ஜெயகோபால் மீது இதுவரை 279, 304(ஏ), 336 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் உறுதியானால் 308 பிரிவின் கீழ் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12ம் தேதி மாலை 3 மணியளவில் சுபஸ்ரீ என்பவர் ஸ்கூட்டரில் துரைப்பாக்கம் - குரோம்பேட்டை 200 அடி ரேடியல் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை அருகே வந்தபோது ரேடியல் சாலையில் சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த பள்ளிக்கரணை அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாக கழன்று அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த சுபஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் விதிமீறி பேனர் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

இதையடுத்து, விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பீகாரை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர். மேலும், பேனர் அச்சிட்டு தந்ததாக கோவிலம்பாக்கம், விநாயகபுரத்தில் உள்ள அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவர் மனோஜ் முதல் குற்றவாளியாகவும், 2வது குற்றவாளியாக அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை சேர்த்தனர். லாரி ஓட்டுநர் மற்றும் பேனர் வைத்தவர் எனப் பொதுவாகக் குறிப்பிட்டு 279, 336, 304(A) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் மீது ஜாமினில் வெளிவர முடியாத 308 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

308 இதச என்ன சொல்கிறது?

ஒருவன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு காரியத்தைப் புரிகிறான். ஒருவருக்கு மரணத்தை உண்டாக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் அந்தக் காரியம் செய்யப்படுகின்றது. அந்தக் காரியத்தின் விளைவால் மரணம் சம்பவித்தால், குற்றம்புரிந்த நபருக்கு கொலைக்குற்றம் ஆகாத மரணத்தை விளைவிக்கும் குற்றம்சாரும் என்றால் மரணம் விளையாவிடினும், குற்றவாளிக்கு மரணத்தை விளைவிக்க முயற்சி செய்ததற்காக 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அந்தக் காரியத்தின் விளைவாக யாருக்காவது காயம் ஏற்பட்டால், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். உதாரணம்: ஒருவரை நோக்கி ஆத்திரத்தில் திடீரென்று கடுஞ்சினம் ஊட்டப்பட்ட நிலையில் மற்றொருவர் சுடுகிறார். அதனால் மரணம் நிகழ்ந்தால், சுட்டவர் மீது கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம் சாட்டப்படும். ஆகவே, மரணம் நிகழாதபோது சுட்டவர் மீது, மரணத்தை விளைவிக்க முயற்சிசெய்த குற்றம்சாரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com