
இந்திய விமானப் படையின் அடுத்த தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் ஆர்.கே. எஸ். பதெளரியா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
விமானப் படையின் தலைமைத் தளபதியாக இருக்கும் பி.எஸ். தனோவாவின் பதவிக்காலம் வரும் 30-ஆம் தேதி முடிவடையவுள்ளது. அதனால், அடுத்த தலைமைத் தளபதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், விமானப் படை தலைமைத் தளபதி பி.எஸ். தனோவாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதை அடுத்து, புதிய தலைமைத் தளபதியாக, விமானப் படையின் துணை தளபதியாக இருக்கும் ராகேஷ் குமார் சிங் பதெளரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு அகாதெமி மாணவரான பதெளரியா, கடந்த 1980-ஆம் ஆண்டு விமானப் படையில் இணைந்தார். விமானப் படையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார். போர் விமானத்தில் சுமார் 4,250 மணி நேரத்தைக் கழித்துள்ளார். விமானப் படையின் துணைத் தளபதியாக கடந்த மே மாதம் நியமிக்கப்பட்ட பதெளரியா, இப்போது விமானப் படையின் 26-ஆவது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.