உத்தரப் பிரதேசத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
அஸ்ஸாம் மாநிலத்தைப் போல், தேவைப்பட்டால், உத்தரப் பிரதேசத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று யோகி ஆதித்யநாத் கடந்த சில தினங்களுக்கு முன் கூறினார்.
இதுகுறித்து, லக்னெளவில் அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:
என்ஆர்சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். அவர் தனது சொந்த ஊரான உத்தரகண்டுக்கு திரும்ப வேண்டியிருக்கும்.
இதற்கு முன்பு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, மக்களிடையே பாஜக பிரிவினையைத் தூண்டி வந்தது. தற்போது மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்து வருகிறது. மக்களை அச்சுறுத்துவதற்காகவே என்ஆர்சி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக அரசு கூறுகிறது. அது உண்மையாக இருக்குமெனில் அங்கு இத்தனைக் கட்டுப்பாடுகள் ஏன் விதிக்கப்பட வேண்டும்?
இங்கு பாகிஸ்தானின் பெயரைச் சொல்லி பாஜக வாக்கு சேகரிக்கிறது. ஆனால், பாகிஸ்தானோ பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் பறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. பாகிஸ்தானை விட சீனா அபாயகரமான நாடு. எனவே, நமது எல்லைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கானுக்கு எதிராக, 9 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குகள் பதிவு செய்யப்படுவது ஏன்? அவர் பல்கலைக்கழகம் கட்டியதால், அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார் அகிலேஷ் யாதவ்.
முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி சமாஜவாதி கட்சியில் இணைந்த மூத்த தலைவர்கள் தயாராம் பால், மித்தாய்லால் பாரதியை கட்சி தலைமை அலுவலகத்தில் வரவேற்று வாழ்த்துகள் தெரிவித்தார்.