ஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் செப்டம்பரில் கொட்டித் தீர்த்த மழை

தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் ஹைதராபாத்தில் கனமழை பெய்தது. இதன் மூலம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழும் செப்டம்பர் மாதத்தில் அதிக மழை பெய்து சாதனை படைத்துள்ளது.
ஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் செப்டம்பரில் கொட்டித் தீர்த்த மழை

ஹைதராபாத்: தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் ஹைதராபாத்தில் கனமழை பெய்தது. இதன் மூலம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழும் செப்டம்பர் மாதத்தில் அதிக மழை பெய்து சாதனை படைத்துள்ளது.

ஐஎம்டி வெளியிட்ட அறிக்கையில், ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை 7.5 செ.மீ மழை பெய்தது, சில பகுதிகளில் 13.2 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஒய்.கே. ரெட்டி கூறுகையில், கடந்த 111 ஆண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத்தில் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்ச  மழை பதிவாகியிருக்கிறது. 1908ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 15.32 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. அதன்பிறகு 2017ம் ஆண்டு 9 செ.மீ. மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை மாலை நகரின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இடியுடன் கூடிய மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

ஹைடெக் சிட்டி மற்றும் கச்சிபவுலியின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் மோசமான போக்குவரத்து நெரிசல்கள் காணப்பட்டன. தங்கள் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பிய நூற்றுக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.

தொடர்ச்சியான மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (ஜி.எச்.எம்.சி) அவசர குழு புயல் நீர் வடிகால்களில் உள்ள பாதிப்புகளை சீர் செய்யும் நடவடிக்கையை உடனுக்குடன் மேற்கொண்டது
முன்னதாக, மாநில நகர மேம்பாட்டு மற்றும் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ், ஹைதராபாத் மாநகரில் செப்டம்பர் மாதத்தில் அதிக மழை பெய்துள்ளது என்று கூறினார். " இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் செப்டம்பர் மாதத்தில் பெய்த மிக அதிகமான மழைப்பொழிவை நாங்கள் காண்கிறோம்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, வழக்கமான பருவ மழைக் காலத்தில் செப்டம்பர் மாதத்தில் பெறப்பட்ட மழைப்பொழிவு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களை விட குறைவாக இருக்கும் ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மழைப் பொழிவு அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com