வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் வரை மின்சாரம் மானியம்: எங்கு தெரியுமா?

தில்லியில் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு 200 யூனிட் வரை மின்சார மானியம் அளிக்கும் புதிய திட்டத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தார்.
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் வரை மின்சாரம் மானியம்: எங்கு தெரியுமா?
Published on
Updated on
1 min read

தில்லியில் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு 200 யூனிட் வரை மின்சார மானியம் அளிக்கும் புதிய திட்டத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தார்.

"முக்கிய மந்திரி கிராயதார் பிஜ்லி மீட்டர் யோஜனா' எனும் பெயரிலான இத்திட்டத்தின்படி தில்லி அரசின் மின்சார மானியத்தை வீட்டு வாடகைதாரர்களும் பெற முடியும். தற்போது வரை, தில்லி அரசின் மின்சார மானியத் திட்டத்தில் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வசதி வீட்டு வாடகைதாரர்கள் பெற இயலாத நிலை உள்ளது. 

இந்தப் புதிய திட்டம் குறித்து தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: 
தில்லியில் உள்ள வீட்டு வாடகைதாரர்கள் தங்களுக்கும் தில்லி அரசின் மின்சார மானியத் திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரி வந்தனர். இந்தப் புதிய திட்டத்தின் கீழ் வாடகைதாரர்கள் வாடகை ஒப்பந்தம் அல்லது வாடகை ரசீதையும், குடியிருப்பதற்கான முகவரிச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் தில்லியில் வாடகைக்கு குடியிருப்போரும் இலவச மின்சாரத்தைப் பெற முடியும். 24 மணி நேரமும் மலிவான மின்சாரத்தைப் பெறும் உரிமை தில்லியைச் சேர்ந்த ஒவ்வொருக்கும் உண்டு.

தற்போது வரை குடியிருப்போர் தனியாக மின்சார மீட்டரை பெற முடியவில்லை. தனிப்பட்ட இணைப்புப் பெறுவதற்கு வீட்டு உரிமையாளரின் தடையின்மைச் சான்றிதழைப் பெற வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம். இந்தக் கட்டாயத் தேவையை தற்போது நீக்கியுள்ளோம். 

ஆகவே, குடியிருப்போர் தற்போது வாடகைதாரர் மீட்டரை பெறலாம். அதற்கு வாடகை ஒப்பந்தம் அல்லது ரசீது அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையை சான்றாக அளித்தால் போதுமானது.

வீட்டு உரிமையாளர்கள் பலர், பலதரப்பட்ட வாடகைதாரர்களைக் கொண்டுள்ளனர். ஒரே மின் இணைப்பின் கீழ் பல வாடகைதாரர்கள் மின்சாரத்தை பயன்படுத்துவதால் அதிகமான கட்டணத்தை வாடகைதாரர்கள் செலுத்தும் நிலை உள்ளது. 

தங்களது வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ரூ.10 வரை செலுத்தும் நிலை உள்ளது. இதனால், தில்லி அரசின் 200 யூனிட்டுகள் இலவச மின்சார மானியத்தை அவர்களால் பெற முடியாத நிலை உள்ளது. 

மேலும், வீட்டு உரிமையாளர்களும் இந்தத் திட்டத்தின் பலன்களை அனுபவிக்க முடியாமல் போகிறது. 

இதனால், வாடகைதாரர்களுக்கான திட்டத்தில் அவர்கள் குடியிருக்கும் வீடுகளில் பிரீபெய்டு மீட்டர்கள் பொருத்தப்படும். இதன் மூலம் 200 மீட்டர்கள் வரை அவர்கள் இலவச மின்சாரத்தின் பலனைப் பெற முடியும். மேலும், 200 முதல் 400 மீட்டர் வரையிலான மின்சாரப் பயன்பாட்டில் மானியத்தையும் பெற முடியும். 
ஒரு மீட்டர் பொருத்துவதற்கு ரூ.6 ஆயிரம் செலவாகும். இதில் ரூ.3 ஆயிரம் வைப்புத் தொகையாகும். ரூ.3 ஆயிரம் மீட்டர் பொருத்தும் பணிக்கான சேவைக் கட்டணங்களாகும் என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com