
திருமலையில் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2), கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணிநேரம் ரத்து செய்யப்படுகிறது. ஏழுமலையான் கோயிலில், உகாதி எனப்படும் தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, வரும் 6-ஆம் தேதி ஆஸ்தானம் என்ற சடங்கு நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமையான 2-ஆம் தேதி, கோயில் கருவறை முதல் மகாதுவாரப் பகுதி வரை சுத்தம் செய்யப்பட உள்ளது. "கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்' எனப்படும் இந்த சுத்திகரிப்புப் பணிக்காக அன்று காலை 6 முதல் 11 மணி வரை ஐந்து மணி நேரத்துக்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
அன்று காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும். பிறகு ஏழுமலையானுக்கு முறையாக பூஜைகள் செய்த பின் பக்தர்கள், சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.