
தேர்தல் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ஜனதா கட்சியைப் போன்றே காங்கிரஸ் கட்சியும் மிக பிடிவாதமாக இருந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணி வைக்கும் முயற்சி, நீண்ட இழுபறிக்கு பின் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், சீதாராம் யெச்சூரி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி:
1977-இல் இந்திரா காந்திக்கு எதிராக ஜனதா கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வைக்க முயற்சித்தபோது, நாங்கள் 52 சதவீத தொகுதிகளை ஒதுக்க முன்வந்தோம். ஆனால், அவர்கள் 3-இல் இரண்டு பங்கு தொகுதிகள் வேண்டும் என்றனர்.
இதனால், மேற்கு வங்கத்தில் ஜனதா கட்சியின் நிலை என்ன ஆனது? தங்கள் கோரிக்கையில் இருந்து அவர்கள் இறங்கி வர மறுத்தார்கள். அதன் பின்னர், நாங்கள் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க விரும்பியும், ஜனதா கட்சி அதை ஏற்க மறுக்கிறது என்பதை பொதுமக்களிடம் ஜோதி பாசு (முன்னாள் முதல்வர்) எடுத்துக் கூறினார்.
இதையடுத்து, காங்கிரஸþக்கு எதிரான பலமான போட்டியாளராக நாங்கள் உருவெடுத்தோம். அதற்கு பிறகு, தொடர்ந்து வெற்றி பெற்றோம்.
ஜனதா கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமாக அமைந்ததைப் போலவே, இந்த முறையும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிரான சக்தியாக நாங்கள் உருவெடுப்போம்.
காங்கிரஸ் பேச்சு தோல்வி: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளின் எம்.பி.க்கள் பதவி வகிக்கும் தொகுதிகளில் பரஸ்பரம் போட்டியிட வேண்டாம் என்று நாங்கள் சொன்னோம். ஆனால், துரதிருஷ்டவசமாக காங்கிரஸ் பிடிவாதமாக மறுத்துவிட்டது.
காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ள தொகுதிகளை தவிர்த்து பிற தொகுதிகளுக்கு நாங்கள் வேட்பாளர்களை அறிவித்தோம். அதன் பிறகு 48 மணி நேரம் காத்திருந்தோம். ஆனால், எங்கள் கட்சி எம்.பி.க்கள் இருக்கின்ற 2 தொகுதிகளுக்கும் சேர்த்து அவர்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். ஆகவே, கூட்டணி முயற்சியை உடைத்தது யார் என்பது உங்களுக்கே புரியும்.
இறுதியாக, திரிணமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றான போட்டியாளர் நாங்கள் மட்டுமே என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்றார் யெச்சூரி.