
கோப்புப்படம்
நாட்டின் முக்கிய அமைப்புகள் அனைத்தையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கைப்பற்றிவிட்டது என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
செயற்கைக்கோளை அழிக்கும் சக்தி படைத்த ஏவுகணை சோதனையை (மிஷன் சக்தி திட்டம்) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக மேற்கொண்டது.
இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
டிஆர்டிஓ அமைப்பின் வெற்றியை தனது வெற்றியாக பாஜக கருதி வருவதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு எழுந்துள்ளது. மக்களின் சுதந்திரம் பறிபோயுள்ளது. அவர்களுக்கு பேச்சு உரிமை இல்லை. நாட்டின் அனைத்து முக்கிய அமைப்புகளையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு கைப்பற்றிவிட்டது.
பொதுத் துறை நிறுவனங்களில் முதலீடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்று வருகிறது. இதன்காரணமாக, அரசு ஊழியர்களுக்கு ஊதியம்
கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும், தொழிலாளர்களும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
அனைவரும் ஒன்றிணைந்து மோடி அரசை வீழ்த்துவோம். ஆந்திரத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது. இதன்காரணமாக அந்த மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு இந்தத் தேர்தலில் ஆதரவளிக்கிறேன். மேற்கு வங்கத்தில் 100 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன் என்றார் மம்தா.
மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தியா, விண்வெளி துறையில் பல ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நமது விஞ்ஞானிகளை எண்ணி நாம் எப்போதும் பெருமை கொள்வோம். ஆனால், அவர்களின் உழைப்பை தேர்தலுக்காக மோடி பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் என்று மம்தா ஏற்கெனவே சுட்டுரையில் கருத்து பதிவிட்டிருந்தார்.