
தலைமறைவாக இருக்கும் ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 2016-ஆம் ஆண்டில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது, லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள ஒரு சொத்தை பண்டாரி, கடந்த 2010-ஆம் ஆண்டில் வாங்கிய விலைக்கே விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, அவரது மின்னஞ்சல்களை ஆய்வு செய்ததில், பண்டாரிக்கும், ராபர்ட் வதேராவின் உதவியாளர் மனோஜ் அரோராவுக்கும் இடையே மின்னஞ்சல் பரிமாற்றங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனால் லண்டனில் உள்ள சொத்தின் உண்மையான உரிமையாளர் ராபர்ட் வதேராவாக இருக்கலாம் என்றும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மூலம் அந்தச் சொத்து வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலைியல், ராபர்ட் வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் தலா ரூ.5 லட்சம் சொந்த பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.