
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த ஜங்கல்மகால் பிராந்தியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்ற அந்த மாநில அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.
இதுகுறித்து மேற்கு வங்க அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதியான ஜங்கல்மகால் பிராந்தியத்தில் பாதுகாப்புப் படை வீரர்களை தேர்தல் பணிகளுக்காக பின்வாங்குவதற்கு மத்திய அரசு எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அந்தப் பகுதியில் தொடர்ந்து வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்' என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
பிறகு, இரண்டாவதாக மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினோம். அதில், "ஜார்க்கண்ட் மாநிலத்தையொட்டி ஜங்கல்மகால் பிராந்தியம் உள்ளது. இந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இல்லையெனில் மாவோயிஸ்ட் பயங்கரவாதப் பிரச்னைகள் அதிகரித்துவிடும்' என்று குறிப்பிட்டிருந்தோம்.
ஜங்கல்மகால் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகள் மீண்டும் ஒரு குழுவாக செயல்பட முயற்சி செய்வதை உளவுத்துறை மூலம் அறிந்துகொண்டோம். அதுதொடர்பான அறிக்கையையும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பியிருக்கிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேற்கு மிதுனபுரி, ஜார்கிராம், பங்குரா, புரூலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது ஜங்கல்மகால்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக ஜங்கல்மகால் பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று அந்த மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.