
ரயில்வே வளாகங்களில் இருக்கும் அனைத்து விதமான அரசியல் விளம்பரங்களையும் அகற்றுமாறு, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இரு சம்பவங்களில் இந்திய ரயில்வேயிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், "ரயில் பயணச் சீட்டுகள், ரயில் பெட்டிகள் உள்ளிட்ட ரயில்வே பயன்பாட்டு பொருள்களிலோ, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே வளாகங்களிலோ ஏதேனும் அரசியல் தலைவரின் புகைப்படத்துடன் கூடிய அரசியல் விளம்பரங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விளம்பர முகமைகளுக்கும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது' என்று வி.கே. யாதவ் கூறியுள்ளார்.
முன்னதாக, ரயில் பயணச் சீட்டுகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்தது தொடர்பாக விளக்கமளிக்குமாறு இந்திய ரயில்வேயிடம் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.
அதையடுத்து, சதாப்தி விரைவு ரயிலில் தேநீர் வழங்கப்பட்ட கோப்பையில் "நானும் தேசத்தின் காவலன்' என்ற பிரதமர் மோடியின் பிரசார வாசகம் இருந்தது தொடர்பாக விளக்கமளிக்குமாறும் தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை ஐஆர்சிடிசிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் மாதம் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.