கேரளத்திலும் ராகுல் போட்டி

மக்களவைத் தேர்தலில், கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
கேரளத்திலும் ராகுல் போட்டி

மக்களவைத் தேர்தலில், கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அமேதி மக்களவைத் தொகுதி, ராகுல் காந்தியின் பாரம்பரிய  தொகுதியாகும். இத்தொகுதியில் வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதேபோல், 2ஆவது தொகுதியாக தென் மாநிலங்கள் ஏதேனும் ஒன்றில் ராகுல் காந்தி போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சருமான ஏ.கே. அந்தோணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில பிரிவின் கோரிக்கையை ஏற்று, வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். தென் மாநிலங்கள் மீது அதிக மரியாதை, மதிப்பு ஆகியவற்றை காங்கிரஸ் வைத்துள்ளது என்பதை, அந்த மாநிலங்களுக்கு தெரிவிக்கும் செய்தியே இதுவாகும். 

வயநாடு தொகுதி, கேரளத்தில் இருந்தாலும், தமிழகம், கர்நாடக மாநிலங்களாலும் அது சூழப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதன் மூலம், 3 மாநிலங்களின் கோரிக்கைகளுக்கும் அவர் மதிப்பளித்துள்ளார்.

கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக, கேரள மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களும், மூத்த தலைவர்களும் ராகுல் காந்திக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை ஏற்று, வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி ஒப்புக் கொண்டார் என்றார் ஏ.கே. அந்தோணி.

காங்கிரஸ் கட்சியின் மற்றோர் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியின் எம்.பி.யாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தென் மாநிலங்களின் பிரதிநிதியாகவும் இருக்க விரும்புவதாக தெரிவித்தார்.

அமேதி தொகுதியானது, தமது கர்மபூமி என்றும், அதை விட்டு செல்ல விரும்பவில்லை என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கேரளம், கர்நாடகம், தமிழக பிரிவுகள், தென் இந்தியாவின் கலாசாரம், மொழி ஆகியவை மீது மோடி அரசு தாக்குதல் தொடுத்துள்ளது, இந்த வேளையில் தென் இந்தியாவில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இதை அவர் ஏற்றுக் கொண்டார்.

தென் இந்தியாவின் விருப்பங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கே கேரளத்தில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கலாசாரங்கள், மொழிகள், வாழ்க்கை முறை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களுக்கும், வட இந்தியா மற்றும் தென் இந்தியா இடையே இருக்கும் ஆழ்ந்த தொடர்புகள் இடையே பாஜக ஏற்படுத்தியிருக்கும் பிரிவினைக்கும் பதிலடி கொடுப்பதற்காகவும் கேரளத்தில் அவர் போட்டியிடுகிறார் என்றார் சுர்ஜேவாலா.

காங்கிரஸ் சவால்

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார். "வயநாட்டில் ராகுல் காந்தியை தோற்கடிக்க முடியுமா? என பினராயி விஜயனுக்கு சவால் விடுக்கிறேன். கேரளத்தில் ராகுலுக்கு சாதகமான அலை வீசுகிறது. பிரதமர் பதவி வேட்பாளர் ஒருவர் கேரளத்தில் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவரைத் தோற்கடிப்போம்

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என்று அந்த மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பாஜகவை எதிர்த்து போட்டியிட ராகுல் காந்தி நினைத்தால், அக்கட்சியை எதிர்த்து அவர் போட்டியிட வேண்டும். கேரளத்தை பொறுத்த வரையில், இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையேதான் போட்டியாகும். வயநாடு தொகுதியில் ராகுலை இடதுசாரி கட்சிகள் தோற்கடிக்கும். இதில் இடதுசாரி கட்சிகளுக்கு முழு நம்பிக்கை உள்ளது  என்றார்.

வயநாடு மீண்டும் காங்கிரஸ் வசப்படுமா?

திருவனந்தபுரம், மார்ச் 31: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதை அடுத்து, அங்கு ஏற்கெனவே இரு முறை வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, மீண்டும் வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வயநாடு மக்களவைத் தொகுதி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி கடந்த 2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இத்தொகுதியில் 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.ஷாநவாஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரஹமத்துல்லாவை 1,53,439 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஷாநவாஸ் 4,10,703 வாக்குகளையும், ரஹமத்துல்லா 2,57,264 வாக்குகளையும் பெற்றனர். தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளீதரன் 99,663 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வாசுதேவன் மாஸ்டர் 31,687 வாக்குகளும் பெற்றனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்ட எம்.ஐ.ஷாநவாஸ், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மொகேரியை 20,870 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தேர்தலில் ஷாநவாஸூக்கு 3,77,035 வாக்குகளும், சத்யன் மொகேரிக்கு 3,56,165 வாக்குகளும் கிடைத்தன. பாஜக வேட்பாளர் ராஸ்மில்நாத் 80,752 வாக்குகள் பெற்றார்.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும்,  இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.பி.சுனீரும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியை பாஜக தனது கூட்டணிக் கட்சியான பாரத தர்ம ஜன சேனை கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

அமேதி தொகுதி மக்களால் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சத்தில், கேரளத்தில் போட்டியிட ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர்

மூழ்கிக் கொண்டிருக்கும் அமேதி எனும் கப்பலில் இருந்து கேப்டன்  ராகுல் ஓடிச் செல்கிறார்.

ரவிசங்கர் பிரசாத், மத்திய அமைச்சர்

வயநாடு தொகுதியில் ராகுலை வேட்பாளராக நிறுத்தும் காங்கிரஸின் முடிவு, அக்கட்சியின் அழிவையே காட்டுகிறது. ராகுலுக்கு பாஜக கடுமையான சவாலை ஏற்படுத்தும்.

பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, 
கேரள மாநில பாஜக தலைவர்

இடதுசாரிகளை எதிர்க்க வேண்டும் என்பதையே ராகுல் போட்டியிடுவது காட்டுகிறது. வயநாட்டில் ராகுலின் தோல்வியை மார்க்சிஸ்ட் உறுதி செய்யும்.

பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com