ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு உடனடியாக தேர்தல்

""மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்'' என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவருமான ஒமர்
ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு உடனடியாக தேர்தல்

""மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்'' என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீநகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலுக்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அதிக அளவில் பாதுகாப்புப் படையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதை மனதில் கொண்டு, மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். அதுவும், 3 முதல் 5 வார காலத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
அதேபோல், ஜூலை மாதம் முதல் வாரத்தில்தான் அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இதை சுட்டிக்காட்டி, சட்டப் பேரவைத் தேர்தலை தாமதம் செய்யக் கூடாது. ஏனெனில், அமர்நாத் யாத்திரை என்பது, மாநிலத்திலுள்ள 2 பேரவைத் தொகுதிகளுக்குள் அடங்கி விடும். ஆதலால் சம்பந்தப்பட்ட 2 தொகுதிகளுக்கும், அமர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு முன்போ அல்லது யாத்திரை முடிந்த பின்னரோ தேர்தல் நடத்தலாம். அதேபோல், அமர்நாத் யாத்திரைக்காக மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இதையும் தேர்தல் குறித்து பரிசீலிக்கும்போது மனதில் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் ரமலான் நோன்பு, மக்களவைத் தேர்தலுக்கு இடையூறாக இருக்காது என்கிறபோது, அமர்நாத் யாத்திரையால் மட்டும் எப்படி சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படும்? மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, நாட்டின் எந்தப் பகுதிக்கும் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு தேவைப்படாது. ஆதலால், ஜம்மு-காஷ்மீரில் சட்டப்  பேரவைத் தேர்தலுக்காக கூடுதலாக பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com