காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு: நீட் தேர்வு ரத்து; நாடு முழுவதும் பயிர்க்கடன் தள்ளுபடி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்;
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை  வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை  வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.


* வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் 
* 34 லட்சம் பேருக்கு அரசு வேலை 
* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், பயிர்க்கடன் தள்ளுபடி, ஒரே விகித ஜிஎஸ்டி அமல், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, 34 லட்சம் மத்திய, மாநில அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். 55 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், வேலைவாய்ப்பு, விவசாயிகள் நலன், தொழில்துறை, உள்கட்டமைப்பு, ஊரக மேம்பாடு, வறுமை ஒழிப்பு என பல்வேறு தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு:
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, சில மாநில மாணவர்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளது. மேலும், மாணவர்கள், தங்களது சொந்த மாநிலங்களிலேயே மருத்துவக் கல்வி பெறுவதை உறுதி செய்யும் மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக உள்ளது. எனவே, இத்தேர்வு கைவிடப்பட்டு, மாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
வேலைவாய்ப்புகளை உருவாக்க தனி அமைச்சகம்: புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில், சேவைத் துறைகளை மேம்படுத்தவும் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். வரும் 2020, மார்ச் மாதத்துக்குள் 4 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதுடன், 20 லட்சம் மாநில அரசு பணியிடங்களை நிரப்புவதற்கும் அறிவுறுத்தப்படும். அரசுத் தேர்வுகள், பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை முற்றாக ஒழிப்போம்.
மாநில அரசுகளுடன் ஆலோசித்து கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புர நிர்வாக அமைப்புகள் மூலம் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தொழில்துறையின் பங்களிப்பை 16 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிக்கவும் புதிய தொழில் நகரங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோலியப் பொருள்கள்: தற்போதுள்ள சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மாற்றப்பட்டு, ஒரே விகித ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும். பெட்ரோலியப் பொருள்களையும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவோம்.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள், நாட்டிலிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு, 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 நிதியுதவி வழங்கப்படும். வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாடு முழுவதும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மீன் வளத்துக்கு தனி அமைச்சகம்: மீன்வளம் மற்றும் மீனவர்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நாள்களின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக அதிகரிக்கப்படும். கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக, தற்போதைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் நிதி பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக தேசிய தேர்தல் நிதியம் உருவாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்காக,  கடந்த 1978-ஆம் ஆண்டைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வோம்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதுடன், அந்த மாநிலங்களுக்கென புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும். மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறுவோம். மருத்துவ வசதி பெறுவதற்கான உரிமைச் சட்டம் இயற்றப்படும். இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, மருந்துகள், சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன் அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.
காஷ்மீர் விவகாரம்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும்.
தேச விரோத சட்டம் நீக்கப்படும். கும்பல் கொலைகளைத் தடுக்கவும், அதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை தண்டிக்கவும் கடுமையான சட்டம் இயற்றுவோம். தில்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.

ஒட்டுமொத்த மக்களின் குரல்: ராகுல் காந்தி​
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, தனிப்பட்ட ஒருவருடைய மனதின் குரல் அல்ல; ஒட்டுமொத்த மக்களின் குரல் என்றார் ராகுல் காந்தி.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் அவர் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு வெறுப்புணர்வை பரப்பி, மக்களிடையே பிளவை ஏற்படுத்திவிட்டது. வங்கிகளில் கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் சிவில் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றார் ராகுல்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை
கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் உள்பட பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
மேலும், பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், ஆயுதப்படைகளை நவீனப்படுத்தும் திட்டங்களை விரைவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லைகளில் ராணுவம், மத்திய ஆயுதப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

நீதி ஆயோக் கலைப்பு
திட்டக் குழுவை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக மத்திய கொள்கைக் குழுவை (நீதி ஆயோக்) ஏற்படுத்திய மத்திய பாஜக அரசின் நடவடிக்கை முற்றிலும் தவறானது; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீதி ஆயோக் கலைக்கப்பட்டு, புதிய அம்சங்களுடன் கூடிய திட்டக் குழு அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும்; மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளோம்.

மாநிலப் பட்டியலில் பள்ளிக் கல்வி
பொதுப் பட்டியலில் உள்ள பள்ளிக் கல்வியை, மாநில பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை கட்டாய, இலவச கல்வி உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

அபாயகரமான, செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை. நாட்டை துண்டாடும் நோக்கமே மேலோங்கி நிற்கிறது.
- அருண் ஜேட்லி, மத்திய நிதியமைச்சர்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் கூடியதாக உள்ளது. மத்தியில் மக்கள் சார்ந்த மாற்று அரசு அமைய  பாஜகவை வீழ்த்துவது அவசியம்.
- டி.ராஜா,
இந்திய கம்யூ. தேசியச் செயலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com