2021-இல் செல்லிடப்பேசி செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு?

வரும் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை செல்லிடப்பேசி செயலி மூலமாக நடத்துவதற்கு அதிக வாய்ப்புண்டு என்று மத்திய உள்துறை 


வரும் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை செல்லிடப்பேசி செயலி மூலமாக நடத்துவதற்கு அதிக வாய்ப்புண்டு என்று மத்திய உள்துறை 
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல்முதலாக கடந்த 1872-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 1881-ஆம் ஆண்டில் இருந்து, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் அரசுப் பணியாளர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் ஈடுபடுத்தப்படுவர். அவர்கள் வீடுதோறும் சென்று மக்கள்தொகை குறித்த கணக்கெடுப்பை நடத்துவர். இந்நிலையில், 140 ஆண்டுகளில் இல்லாத நடைமுறையாக, முதல்முறையாக வரும் 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, செல்லிடப்பேசி செயலி மூலமாக நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மற்றும் ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகமுள்ள பகுதிகளுக்கு  2020-ஆம் ஆண்டு, அக்டோபர் 1-ஆம் தேதியும், மற்ற பகுதிகளுக்கு 2021-ஆம் ஆண்டு, மார்ச் 1-ஆம் தேதியும் அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 
இதையொட்டி, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்த மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்,  மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாக கொண்டது அல்ல. இதன் மூலம் நாட்டு மக்களின் சமூக-பொருளாதார நிலை அறிந்து கொள்ள முடிகிறது. வரும் 2021-ஆம் ஆண்டு நடத்தப்படும் கணக்கெடுப்பு, உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பாக இருக்கும்.
இதற்கான, கணக்கெடுப்பு பணியில் சுமார் 33 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். அதற்கான அறிவிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை, கணக்கெடுப்பாளர்கள் தரவுகளை சேமிப்பதற்காக செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. கணக்கெடுப்பாளர்கள், அவர்களுடைய செல்லிடப்பேசியிலேயே இந்த தரவுகளை சேமித்து கொள்ளலாம். செயலியை பயன்படுத்த முடியாத நிலையில், ஆவணங்களில் அவர்கள் தரவுகளை பதிவு செய்து கொள்ளலாம். எனினும் இறுதி தரவை கணிப்பொறியில் பதிவேற்றம் செய்து மின்னணு வடிவத்தில் அளிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும்போது அதை கவனமாக செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். 
இதனிடையே, மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆணையர் விவேக் ஜோஷி  பேசுகையில்,  மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதல்கட்ட கணக்கெடுப்பு 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும். அதில் நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் கணக்கெடுக்கப்படும். அதையடுத்து இறுதி கணக்கெடுப்பு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com