
அமிருதசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக் நினைவிடம்.
ஜாலியன்வாலாபாக் படுகொலை பிரிட்டன்-இந்திய வரலாற்றில் அவமானகரமானதாகும் என்று பிரிட்டன் பிரதமர் தெரஸா மே தெரிவித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம், ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஒன்று திரண்ட மக்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அந்த நேரத்தில், பிரிட்டன்-இந்தியப் படையினர் 50 பேருடன் அங்கு வந்த பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர், மக்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்.
இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், 400 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பிரிட்டன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, ஜெனரல் டயரை பதவியிலிருந்து பிரிட்டீஷ் அரசாங்கம் நீக்கியது. டயர், 1927ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தப் படுகொலைக்கு பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போதைய பிரிட்டன் பிரதமர் தெரஸா மே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1919ஆம் ஆண்டில் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் அவமானகரமானது.
1997ஆம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் இடத்தை பார்வையிட்டார் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத். அப்போது, இந்தச் சம்பவம் மிகவும் கவலை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாகும் என்று தெரிவித்திருந்தார் என்று அதில் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.