
ஹைதராபாதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களையும் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்வதற்கு தயார்படுத்தும் தேர்தல் அதிகாரிகள்.
ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வியாழக்கிழமை (ஏப்.11) தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம், சிக்கிம் மாநில சட்டப் பேரவைகளுக்கும், ஒடிஸா சட்டப் பேரவையிலுள்ள சில தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவைக்கு வியாழக்கிழமை (ஏப்.11) முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்டமாக, ஆந்திரம் (25), அருணாசலப் பிரதேசம் (2), அஸ்ஸாம் (5), பிகார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு-காஷ்மீர் (2), மகாராஷ்டிரம் (7), மணிப்பூர் (1), மேகாலயம் (2), மிúஸாரம் (1), நாகாலாந்து (1), ஒடிஸா (4), சிக்கிம் (1), தெலங்கானா (17), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகண்ட் (5), மேற்குவங்கம் (2) ஆகிய 18 மாநிலங்கள், அந்தமான்-நிகோபார் தீவுகள் (1), லட்சத்தீவு (1) ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆந்திரத்தில் தேர்தல் நடைபெறும் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதேபோல், மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் தனித்தனியாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிக்கப்பட்டன. அதையடுத்து நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.
தெலுங்கு தேசம் கட்சியின் 37 ஆண்டுகால வரலாற்றில், தேர்தலை அக்கட்சி தனித்து எதிர்கொள்வதும் இதுதான் முதல்முறையாகும்.
ஒடிஸா மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து, மொத்தமுள்ள 147 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 28க்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகள், நக்ஸலைட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்கள் ஆகும். இதனால் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் 1 மக்களவைத் தொகுதிக்கும், சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை தேர்தல் நடத்தப்படுகிறது. 32 பேரவைத் தொகுதிகளில் 150 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1 மக்களவைத் தொகுதியில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல்வர் சாம்லிங், முன்னாள் கால்பந்து வீரர் புட்டியா ஆகியோர் முக்கியமானவர்கள். 120 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு மத்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகள் செவ்வாய்க்கிழமை நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேர் பலியாகினர். இதை கருத்தில் கொண்டு, சத்தீஸ்கரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.